கண்மூடித்தனமான நம்பிக்கை ஒரு மனிதனை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும். அது சில சமயம் நம்மை பாதிப்பதோடு மட்டுமில்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும். அப்படியான சம்பவம்தான் அண்மையில் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்துள்ளது. 


ஆக்ராவின் அர்ஜூன் நகரில் உள்ள பத்வாரி கோயிலில் பூசாரியாகப் பணியாற்றுகிறார் லேக் சிங். இவர் அங்கே கடந்து 30 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை எப்போதும் போல கடவுள் சிலைக்கு     பூஜை செய்வதற்கான முன்னேற்பாடுகளை சிங் செய்துள்ளார். அப்போது கிருஷ்ணர் சிலையைக் கையில் வைத்தபடி துடைத்துக் கொண்டிருந்த லேக் சிங் அதனை கைதவறி கீழே போட்டுள்ளார். கீழே விழுந்த சிலை தரையில் மோதிக் கை உடைந்துள்ளது. பதறிப் போன லேக் சிங். உடனடியாக சிலையை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கே கிருஷ்ணருக்கு கை உடைந்துவிட்டதால் சிலைக்கு சிகிச்சை பார்க்க சொல்லி கேட்டுள்ளார். முதலில் யாரும் அவர் சொல்வதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அவர் அழத் தொடங்கியதும் கடுப்பான டாக்டர்கள் ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்காமல் ‘ஸ்ரீ கிருஷ்ணா’ என்கிற பெயரில் பேஷண்ட்டை அனுமதித்து பரிசோதனை செய்து உடைந்த சிலையின் கைக்கு கட்டு போட்டு அனுப்பியுள்ளனர்’ 






இதுகுறித்துக் கூறும் லேக் சிங்,’நான் முதலில் மருத்துவமனை வந்து கிருஷ்ணருக்கு சிகிச்சை பார்க்கச் சொல்லிக் கெஞ்சினேன். யாரும் என் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த கடவுள் எனக்கு முக்கியம். பல வருடங்களாக அந்தக் கோவிலில் நான் வேலை பார்த்து வந்தேன். கை உடைந்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் வேண்டுமென்றே அப்படிச் செய்யவில்லை. நான் பிறகு அழத் தொடங்கியதைப் பார்த்தது. என்னை அழைத்து கடவுள் சிலைக்கு கட்டுப் போட்டு அனுப்பினார்கள்.இந்த டாக்டர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.’ எனக் கூறினார். 



இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.