புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அண்மையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு முன்பு இதனை அறிவித்தார். பலமாதக் காத்திருப்பு, 600க்கும் மேற்பட்டவர்கள் பலி, கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் என அனைத்தையும் கடந்து தொடர்ந்து போராடிய விவசாயிகளின் பொறுமைக்குக் கிடைத்த பலன் என பல்வேறு தரப்பினர் கருத்து கூறினர். பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான முன் தயாரிப்பாகத்தான் இந்த வேளாண் சட்ட வாபஸ் நடவடிக்கை எனப் பலர் கருத்து கூறினார்கள். 






இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேளாண் சட்டங்கள் குறித்துப் பேசிய வீடியோ அண்மையில் வைரலானது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் சமயம் மதுரை வந்திருந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


கடந்த பொங்கல் சமயம் தமிழ்நாடு வந்திருந்த ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,’என்னுடைய வார்த்தைகளை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். இந்த வேளாண் சட்டங்கள், இதனை அரசு நெருக்கடியால் திரும்பப் பெறும் சூழல் வரும். இன்று நான் சொல்வதைக் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் (Mark my words … these (farm) laws… the Government will be forced to take them back, Remember what I said!”)’ எனக் கூறினார். இந்த சிறிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்வைக் காண வந்த அவர் இவ்வாறு பேசினார்.முன்னதாக, வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்ற பிறகு பேசிய பிரதமர் மோடி, “"விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை நான் பார்த்திருக்கிறேன். நம் நாட்டில் 100 விவசாயிகளில் 80 பேர் சிறு விவசாயிகள், 2 ஏக்கருக்கும் குறைவான நிலமே அவர்களிடம் உள்ளது. விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை நான் உணர்ந்துள்ளேன். விவசாயிகளுக்கு சேவை செய்வதே எங்கள் அரசின் நோக்கம்." என்று தங்கள் அரசினை முன்வைத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வரவிருக்கும் தேர்தலில் பெரும் திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தளராமல் போராடிய விவசாயிகளின் திடமான வெற்றி என்றாலும் கூட இதற்கு பின்னால் தேர்தல் கணக்கு இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பதான் செய்கிறது.