Google Maps: சாதாரண உடையில் இருந்த அசாம் போலீசார் கூகுள் மேப்பால் வழிதவறி, நாகாலாந்து மாநிலத்திற்குள் நுழைந்தபோது இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.


வேலையை காட்டிய கூகுள் மேப்:


அசாம் மாநில காவல்துறையை சேர்ந்த 16 பேர் கொண்ட குழு, கூகுள் மேப்ஸின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி குற்றவாளியை தேடி பயணித்துள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக, அசாம் போலீசார் நாகாலந்து மாநில எல்லைக்குள் நுழைந்தனர். சீரூடையில் இல்லாமல் சாதாரண உடையில் ஆயுதம் ஏந்தி இருந்த போலீசாரை கண்டு, உள்ளூர்வாசிகள் திருடர்கள் என தவறாக கருதியுள்ளனர். இதைதொடர்ந்து, பொதுமக்கள் திரண்டு அசாம் போலீசாரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி, சிறைப்பிடித்த சம்பவம், மொகோக்சுங் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு  அரங்கேறியுள்ளது. இறுதியில் நாகாலாந்து காவல்துறையினரால் அசாம் காவலர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.



நடந்தது என்ன?


குற்றவாளியை துரத்தி சென்றபோது, நாகாலாந்தில் இருந்த தேயிலைத் தோட்டத்தை, அசாம் எல்லையில் இருப்பதாக கூகுள் மேப்ஸ் தவறாகக் காட்டியதால், இந்த குழப்பம் ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 16 பணியாளர்களில், மூன்று பேர் மட்டுமே சீருடையில் இருந்தனர், மீதமுள்ளவர்கள் சாதாரண உடையில் இருந்தனர். இது உள்ளூர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் கிராம மக்கள் தாக்கியதில், அசாம் காவலர் ஒருவர் காயமடைந்தார்” என அம்மாநில காவல்துறை அதிகாரி விளக்கமளித்துள்ளார்.


உண்மை தெரிந்தது எப்படி?


தங்கள் மாநில போலீசார் எல்லை தாண்டி சென்று சோதனை நடத்துவது குறித்து தகவல் அறிந்ததும், அசாம் போலீசார் நாகாலாந்தில் உள்ள அவர்களது சக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாகாலாந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசாம் போலீசாரை மீட்டனர். போலீசாரை தடுத்து வைத்திருந்ததை உணர்ந்த உள்ளூர் மக்கள், முதலில் ஐந்து பேரையும், மீதமுள்ள 11 பேரை மறுநாள் காலையும் விடுவித்துள்ளனர். கூகுள் மேப்பால் போலீசார் வழிதவறி சென்று, பொதுமக்களிடம் சிக்கி தாக்குதலுக்கு ஆளான சம்பவம், அசாம் மற்றும் நாகாலாந்து மாநில போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதோடு, கூகுள் மேப்பால் வழிதவறி சென்று மோசமான பகுதிகளில் சிக்கிக் கொள்வது, நீர்நிலைகளில் விழுவது, பாலத்தில் இருந்து கவிழ்வது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதன் நீட்சியாக தான் போலீசாரே வழிதவறி சென்று சிக்கலில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.