எலன் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் அடிப்படையிலான ஆப்-ஆன த்ரெட்ஸை இன்று (ஜூலை 6) அன்று மெட்டாவிற்கு சொந்தமான Instagram அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
மஸ்கின் அக்கப்போருகளால் பயனர்கள் அதிருப்தி
மஸ்க் ட்விட்டரைக் கையகப்படுத்திய சில மாதங்களில், பற்பல மாற்றங்களை கொண்டு வந்தார். ப்ளூ டிக் விதிகளையே மாற்றி, அதனை சப்ஸ்கிரிப்ஷனாக மாற்றினார். அதற்காக மாதா மாதம் சந்தா செலுத்த வேண்டும் என்றார். அது நாள் வரை பிரபலங்களாக ப்ளூ டிக் வாங்கி வைத்திருந்தவர்கள் இடையே பெரும் அடியாக அது இருந்தது. அதன் பிறகு ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அவர் செய்து வரும் காரியங்கள் தான் பலரை கடுப்பேற்றி வருகிறது. டிவிட்டரின் உலாவல் அனுபவம் தான் மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். அதற்கு டிவிட்டரின் சில பாரம்பரிய விதிகள் மற்றும், இன்டர்ஃபேஸ்தான் காரணம். 280 எழுத்துக்கள் என்பதை 10,000 என்று ப்ளூ டிக் பயனர்களுக்கு வழங்கினார். இதன் மூலம் த்ரெட் என்ற ஒரு கலாச்சாரம் டிவிட்டரில் குறைந்து வந்தது. அதையே பகடை காயாக எடுத்து 'த்ரெட்ஸ்' என்ற ஆப்பை உருவாக்கி மஸ்கிற்கு ஆப்பு வைக்க முயல்கிறது மெட்டா நிறுவனம்.
இன்ஸ்டாகிராமின் திரெட்ஸ்
"இன்ஸ்டாகிராமின் சிறந்த பகுதிகளை எடுத்து உரை, யோசனைகள் மற்றும் உங்கள் மனதில் உள்ளதைப் பற்றி விவாதிப்பதற்கான புதிய அனுபவத்தை உருவாக்குவதே எங்கள் பார்வை. இது போன்ற நட்பு சமூகம் உலகிற்குத் தேவை என்று நான் நினைக்கிறேன்" என்று Meta CEO Mark Zuckerberg ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் ஆப்ஸ் iOS மற்றும் ஆண்ட்ராய்டில் கிடைக்கும். இன்ஸ்டாகிராம் விரைவில் ActivityPub உடன் த்ரெட்ஸ் ஆப்பை இணங்கச் செய்யும் என்று கூறியது, இது Mastodon மற்றும் WordPress போன்ற ActivityPub நெறிமுறையை ஆதரிக்கும் பிற ஆப்களுடன் இயங்கக்கூடியதாக த்ரெட்ஸை மாற்றும்.
500 எழுத்துகள் வரை எழுதலாம்
சமீபத்தில் குறிப்பாக ப்ளூ டிக் அல்லாதவர்கள் ஒரு நாளைக்கு 300 டிவிட்ஸ் மட்டுமே பார்க்கமுடியும் என்று அறிவித்த அறிவிப்பும், அடிக்கடி டிவிட்டர் டவுன் ஆவதும் பலரை, வேறு ஆப் பக்கம் இந்த திரும்ப தூண்டி வருகிறது. பலரும் டிரம்பின் 'ட்ரூத்' பக்கம் செல்லவிருந்த நிலையில், சரியான நேரத்தில் மெட்டா போன்ற ஒரு நம்பிக்கைக்குரிய நிறுவனம் இப்படி ஒரு ஆப்பை வடிவமைத்த பின் பலருடைய பார்வையும் இங்கு திரும்பியுள்ளது. த்ரெட்ஸ் ஒரு முழுமையான செயலியாக இருந்தாலும், அது Instagram உடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைந்து, 5 நிமிட நீளமுள்ள இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உள்ளடக்கிய 500 எழுத்துகள் கொண்ட 'த்ரெட்களை' பதிவிடலாம். பயனர்கள் இந்த த்ரெட்களை தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அல்லது அவர்கள் விரும்பும் வேறு எந்த தளத்திலும் பகிரலாம் என்பது கூடுதல் சிறப்பு.
இன்ஸ்டாகிராம் கணக்கு விவரங்கள் இதிலும் இணையும்
பயனர்களின் இன்ஸ்டாகிராம் பயனர்பெயர் மற்றும் சரிபார்ப்புகள் இதிலும் தொடரும், என்று நிறுவனம் கூறியது. ஒருவர் இன்ஸ்டாகிராமில் பின்பற்றும் அதே கணக்குகளைப் பின்பற்றலாம் மற்றும் சேவையின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் பயனர் கட்டுப்பாடுகளுக்கான அணுகலைப் பெறலாம். 16 வயதுக்குட்பட்ட (அல்லது குறிப்பிட்ட நாடுகளில் 18 வயதுக்குட்பட்ட) பயனர்கள் த்ரெட்களில் சேரும்போது இயல்பாகவே பிரைவேட் அக்கவுண்டாக உருவாகும் என்று Instagram குறிப்பிட்டது. டிவிட்டரின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, அது பயனர்களுக்கு தேவையான பதிவுகளை கொண்டு சேர்க்கும். அதே பாணியில் தாங்கள் பின்தொடரும் கணக்கில் இருந்தும், பின் தொடராது கணக்கில் நமக்கென பிரத்யேகமாக பரிந்துரைக்கப்படும் பதிவுகளையும் தொகுத்து தரும்படியாக அல்காரிதம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.