ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்ற இடத்தில், இருந்த கோனார்க் சக்கரம் ஒடிசாவின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. 


உலக தலைவர்களை வரவேற்ற மோடி:


டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த தலைவர்களை பிரதமர் மோடி வளாகத்தில் காத்திருந்து வரவேற்றார். அப்போது, வருகை தந்த தலைவர்களுடன் சேர்ந்து, அந்த இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த கோனார்க் சக்கரத்தின் மாதிரியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  அமெரிக்க அதிபர் ஜோ பிடனை வரவேற்ற பிறகு, கோனார்க் சக்கரத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த கோனார்க் சுரியன் கோயில் சக்கரம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


கோனார்க் சூரியன் கோயில் சக்கரம்:


அந்த கோனார்க் சக்கரத்தின் ஒரு பக்கத்தில் G20 லோகோ உள்ளது, மற்றொரு புறத்தில் 'வசுதைவ குடும்பகம்' என்ற சமஸ்கிருத ஸ்லோகம் இடம்பெற்றுள்ளது.  இதன் பொருள ”ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம்” என்பது தான்.  இந்த வாசகம் இந்தியா தலைமையிலான G20 அமைப்பின் தீம் ஆக உள்ளது. கோனார்க் சக்கரம் 13 ஆம் நூற்றாண்டில் மன்னர் முதலாம் நரசிம்மதேவாவின் ஆட்சியின் காலத்தில் வடிவம் பெற்றது. 24 ஆரங்கள் கொண்ட சக்கரம், இந்தியாவின் பண்டைய ஞானம், கட்டடக்கலை சிறப்பு மற்றும் மேம்பட்ட நாகரிகத்தை குறிக்கிறது.


சக்கரத்தின் சிறப்பம்சங்கள்:


கோனார்க் சக்கரம் எப்பொழுதும் காலத்தைக் குறிக்கும். இதில் இடம்பெற்றுள்ள 12 ஜோடி ஆரங்கள் ஒரு வருடத்தில் 12 மாதங்களைக் குறிக்கும். சூரிய பகவான் காலத்தின் அதிபதியாகவும், காலத்திற்கு அப்பாற்பட்டவற்றின் அதிபதியாகவும் கருதப்படுகிறார். கோனார்க் சக்கரத்தில் தெய்வங்கள் மட்டுமின்றி,  பறவைகள், மனிதர்கள், விலங்குகள்,  மலைகள், ஆறுகள் போன்றவற்றின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.


குறியீடு: கோனார்க் சக்கரம் சூரியக் கடவுளின் தேரின் சக்கரத்தைக் குறிக்கிறது. சூரியன் கோயிலே  ஒவ்வொன்றும் சுமார் 10 அடி விட்டம் கொண்ட 24 சக்கரங்களை கொண்ட, பிரமாண்டமான தேர் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு குதிரைகள் கொண்ட ஒரு தொகுப்பால் இழுக்கப்படுகிறது. இந்த சக்கரங்கள் ஒரு நாளின் 24 மணிநேரத்தையும் குறிக்கின்றன.


வடிவமைப்பும் & அம்சமும்:


இந்த சக்கரங்கள் இந்திய கலை மற்றும் கட்டடக்கலையின் தலைசிறந்த படைப்புகளாக கருதப்படுகின்றன. சிக்கலான முறையில் செதுக்கப்பட்டுள்ள இந்த சக்கரங்களில் மலர் உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் காட்சிகள் உள்ளிட்ட சிக்கலான வடிவமைப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன. சக்கரங்களின் ஆரங்களை சூரியக் கடிகாரமாகப் பயன்படுத்தலாம். ஆரங்களின் நிழலைக் கவனிப்பதன் மூலம், ஒரு நாளின் தோராயமான நேரத்தை தீர்மானிக்க முடியும்.


ஆன்மீக முக்கியத்துவம்: இந்த சக்கரங்கள் ஆன்மீக அர்த்தத்தையும் கொண்டுள்ளன. அவை உருவாக்கம், பாதுகாத்தல் மற்றும் அழிவின் சுழற்சியைக் குறிக்கின்றன; பகல், இரவு சுழற்சியை குறிப்பதோடு,   பிறப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியையும் இந்த சக்கரங்கள் குறிக்கின்றன.


வரலாற்றுச் சூழல்: கோனார்க் சூரியன் கோயில் 13 ஆம் நூற்றாண்டில் கிழக்கு கங்கா வம்சத்தின் மன்னர் முதலாம் நரசிம்மதேவனால் கட்டப்பட்டது.  சூரியன் கோயில் ஒடிசாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தின் சின்னமாகும். சுமார் 1,200 கைவினைஞர்கள் கோனார்க்கில் வங்காள விரிகுடாவின் கரையில் குளோரைட் மற்றும் மணற்கல்லைப் பயன்படுத்தி 12 ஆண்டுகளில் இந்த கோயிலை கட்டி முடித்தனர். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


தற்போதைய நிலை: பல ஆண்டுகளாக, இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகளால், கோயில் சேதம் அடைந்துள்ளது. கோயிலின் சில பகுதிகள் சிதிலமடைந்த நிலையில், சக்கரங்கள் பெரும்பாலும் அப்படியே உள்ளன, அக்கால கைவினைஞர்களின் சிறந்த கைவினைத் திறன்களுக்கு சாட்சியாக உள்ளன


சுற்றுலா ஈர்ப்பு: இந்த சக்கரம் உள்ள சூரிய கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது வரலாற்று மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இடம் மட்டுமல்ல, பலருக்கு மகத்தான ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.