உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஜி20 அமைப்பின் 21ஆவது உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியம் இணைந்துள்ளது. ஜி20 வரலாற்றில், இது முக்கியமான நிகழ்வாக பார்கப்படுகிறது.
வரலாறு படைத்த இந்தியா:
அதன் தொடர்ச்சியாக, டெல்லி உச்சி மாநாட்டின் தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு உச்சி மாநாட்டின் இறுதியிலும், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அந்த வகையில், இன்று ஏற்கப்பட்ட தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது என டெல்லி உச்சி மாநாட்டின் இந்திய பிரதிநிதி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த பிரதமர் மோடி, "எனக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எங்கள் குழுவின் கடின உழைப்பின் காரணமாக, டெல்லி ஜி20 உச்சிமாநாட்டின் தீர்மானத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இந்த பிரகடனத்தை ஏற்க வேண்டும் என முன்மொழிகிறேன்.
தீர்மானம், ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கிறேன். இதற்காக கடுமையாக உழைத்து, அதைச் சாத்தியப்படுத்திய உச்சி மாநாட்டின் இந்திய பிரதிநிதி, அமைச்சர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துகிறேன்" என்றார்.
100% ஒருமித்த கருத்துடன் ஏற்கப்பட்ட தீர்மானம்:
இதுகுறித்து டெல்லி உச்சி மாநாட்டின் இந்திய பிரதிநிதி அமிதாப் காந்த் குறிப்பிடுகையில், "ஜி20 அமைப்பின் வரலாற்றிலேயே இந்தியா தலைமையிலான ஜி20 அமைப்புதான், பல லட்சியங்களை கொண்டதாக உள்ளது.
73 முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. தலைமை ஆவணங்கள், பணிக் குழு ஆவணங்கள் இல்லாமல் தீர்மானத்தில் 39 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 112 முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. முந்தைய தலைமையை விட பணியை இருமடங்காக உயர்த்தியுள்ளோம். வளர்ச்சி தொடர்பான, புவிசார் அரசியல் தொடர்பான அனைத்து பிரச்னைகளிலும் 100% ஒருமித்த கருத்துடன் வரலாற்று சிறப்புமிக்க முன்னோடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் மக்கள், அமைதி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் வகையில் புவிசார் அரசியல் தொடர்பான புதிய பத்திகள் சேர்க்கப்பட்டுள்ளன. இன்றைய உலகில் பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை இது விளக்குகிறது. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது மைல்கல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இது, உலகளாவிய சவால்களை ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துடனும் எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை குறிக்கிறது. ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, பகிரப்பட்டு பொறுப்பு ஆகியவற்றை டெல்லி தீர்மானம் குறிக்கிறது" என்றார்.
தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:
- வலுவான, நிலையான, சமநிலையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம்.
- நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவது
- நிலையான எதிர்காலத்திற்கான பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம்.
- 21ஆம் நூற்றாண்டின் பலதரப்பு நிறுவனங்கள்
- பன்முகத்தன்மையை புத்துயிர் பெறுதல்