பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓய்வை அறிவித்திருக்க கூடாது என்றும் வேறுவிதமான சூழ்நிலை இருந்திருந்தால் 2032 வரை விளையாடி இருப்பேன் என்றும் வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.


பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தின் 50 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டி வரை சென்று அசத்திய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டி வரை சென்றபோதிலும், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


வினேஷ் போகத் எழுதிய உருக்கமான கடிதம்: இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு சோகம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது. மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். இடி மேல் இடியாக மற்றொரு செய்தி வெளியானது. வெள்ளி பதக்கம் கோரி அவர் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


தொடர் சவால்களை சந்தித்து வரும் வினேஷ் போகத், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட உடனேயே ஓய்வை அறிவித்திருக்க கூடாது என்றும் வேறு சூழல் இருந்திருந்தால் 2032ஆம் ஆண்டு வரை விளையாடி இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.


வினேஷ் போகத் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "மல்யுத்தப் போராட்டத்தின் போது, ​​இந்திய பெண்களின் புனிதம், நமது இந்தியக் கொடியின் புனிதம், விழுமியங்களை பாதுகாக்க நான் கடுமையாகப் போராடினேன்.


ஆனால், 2023ஆம் ஆண்டு, மே 28ஆம் தேதி முதல் இந்தியக் கொடியுடன் நான் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது, ​​அது என்னை ஆட்டிப்படைக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியக் கொடி உயரத்தில் பறக்க வேண்டும். விழுமியத்தை பிரதிபலிக்கும் புனிதத்தை மீட்டெடுக்கும் இந்தியக் கொடியுடன் நான் இருக்கும் படத்தை எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.


ஓய்வை திரும்பப் பெறுகிறாரா? இப்படிச் செய்வதன் மூலம் கொடிக்கு நடந்ததும், இந்தியாவில் மல்யுத்த விளையாட்டுக்கு நடந்ததும் தவறு என உணர்த்த விரும்பினேன். அதை என் சக இந்தியர்களுக்குக் காட்ட வேண்டும் என்று நான் உண்மையில் எதிர்பார்த்தேன்.


சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்த வார்த்தைகள் போதுமானதாக இல்லை. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன். ஆகஸ்ட் 6ம் தேதி இரவும், ஆகஸ்ட் 7ம் தேதி காலையும் நான் விட்டுகொடுக்கவில்லை. முயற்சிகள் நிற்கவில்லை. சரணடையவில்லை. ஆனால், நேரம் நின்றுவிட்டது. காலம், நியாயமானதாக இருக்கவில்லை. எனது தலைவிதியும் அப்படிதான்.


எனது குழுவிற்காக எனது சக இந்தியர்களுக்காக எனது குடும்பத்தினருக்காக, நான் உழைத்துக்கொண்டிருந்த இலக்கு, அடையத் திட்டமிட்டது நிறைவேறாதது போல் உணர்கிறேன். ஏதோ, ஒன்று எப்போதும் காணாமல் போனது போல் உணர்கிறேன். விஷயங்கள் மீண்டும் அப்படியே நடக்கபோவதில்லை.


வேறு சூழல் இருந்திருந்தால், 2032 வரை நான் விளையாடி இருப்பேன். ஏனென்றால், எனக்குள் போராட்டமும் என்னுள் மல்யுத்தமும் எப்போதும் இருக்கும். எதிர்காலம் என்ன, அடுத்த பயணத்தில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்பதை என்னால் கணிக்க முடியாது. ஆனால், நான் எதை நம்புகிறேனோ, சரியான விஷயத்திற்காக எப்போதும் போராடுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.