கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஒட்டுமொத்த நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


பெண் மருத்துவர் மரணம்:


பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கோரி கொல்கத்தாவில் கடந்த ஓரிரு நாட்களாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு நடந்த போராட்டத்தின்போது மருத்துவர்கள் போராட்டத்தை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர்.


மருத்துவர்கள் வேலை நிறுத்தம்:


மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, நாளை காலை 6 மணி முதல் வரும் நாளை மறுநாள்( 18ம் தேதி) காலை 6 மணி வரை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.






அவசரத் தேவைகள் மற்றும் அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து செயல்படும். அவசரச் சிகிச்சை பிரிவு இயங்கும். வழக்கமான புறநோயாளிகள் பரிசோதனை பிரிவு இயங்காது. நிர்ணயிக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாது. மருத்துவர்களின் நியாயமான போராட்டத்திற்கு தேசத்தின் அனுதாபம் தேவைப்படுவதாகவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.


இந்திய மருத்துவ சங்கம் விடுத்துள்ள அழைப்பால் நாளை ஒட்டுமொத்த நாட்டிலும் மருத்துவ சேவை இயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.