கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், பதைக்கபதைக்க வைக்கும் தகவல்கள் உடற்கூறியல் அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. உடற்கூறியல் அறிக்கையின் படி, உயிரிழந்த பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட முறையோ, ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களோ வல்லுறவு செய்ததற்கான கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடும், நாட்டின் பெண்களும் மன உளைச்சல் கொள்ள வைத்திருக்கிறது இத்தகவல்.


கொல்கத்தாவில் உள்ள பிரபல ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செமினார் ஹாலில் இருந்து பயிற்சி மருத்துவர் ஒருவரின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பாக சட்ட ரீதியிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சக மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சில குழுவினர் மருத்துவமனையின் மீது கல் எரிந்து, மருத்துவமனையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினர்.


போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர  காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்; தடியடி நடத்தினர் அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தனர். 


மருத்துவர்கள் போரட்டத்தில் திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் எப்படி வந்தனர்? யார் அவர்கள்? என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கலவரத்தில் இரண்டு காவல் துறை கார், இருச்சக்கர வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. நேற்று நள்ளிரவு மருத்துவமனையின் முன்பு குவிந்த குழுவினர் போராட்டத்தில் கலவரம் உண்டாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்காக போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில்,  அப்பகுதியில் கலவரக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டத்து.  ஏற்பட்ட கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர கொல்கத்தா மாநகர தலைமை காவல் அதிகாரி வினீத் கோயல் நள்ளிரவு 2 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்தார்.


இது தொடர்பாக வினீத் கோயல் தெரிவிக்கையில், ”இங்கு நடைபெற்ற சம்பவம் தவறாக மீடியா பரப்புரையால் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் நாங்கள் யாரையும் பாதுகாக்க விரும்பவில்லை. சாட்சியங்களை மறைப்பது அழிப்பது எங்களின் நோக்கம் அல்ல. சரியான பாதையில் விசாரணை நடந்து வருகிறது“ என்று தெரிவித்தார்,