கொல்கத்தாவில் இளம்பெண்ணிடம் அவரது மைத்துனர் அத்துமீறி நடந்து கொண்ட நிலையில், அதற்கு அவர் உடன்படாத காரணத்தால் இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து தலையை வெட்டி, உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டு கொல்கத்தா மருத்துவர் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இளம்பெண்ணை கொலை செய்த மைத்துனர்:
இந்த நிலையில், கொல்கத்தாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண்ணை அவரது மைத்துனரே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதோடு நிற்காமல், அவரது தலையை வெட்டி உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்துள்ளார்.
கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் அதியுர் ரஹ்மான் லஸ்கர். இவருக்கு 35 வயது. அதே பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வரும் தன்னுடைய உறவுக்கார பெண்ணை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதற்கு, அந்த பெண் பலமுறை நிராகரித்ததாகவும், எனவே, தான் அவர் கொலை செய்ததாக ரஹ்மான் ஒப்பு கொண்டுள்ளார். இரண்டு வருடங்களாக கணவரைப் பிரிந்த அந்தப் பெண், ரஹ்மான் லஸ்கருடன் தினமும் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
காவல்துறை பரபரப்பு தகவல்:
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் விதிஷா கலிதா கூறுகையில், "அந்த இளம்பெண், ரஹ்மானை தவிர்க்கத் தொடங்கி இருக்கிறார். அவரது தொலைபேசி எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இளம்பெண்ணின் நிராகரிப்பு அவரை கோபப்படுத்தியது.
வியாழன் மாலை, பணி முடிந்ததும், இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, அவரின் கழுத்தை நெரித்து, தலையை துண்டித்து, உடலை மூன்று பகுதிகளாக துண்டித்து, பின்னர் வெவ்வேறு இடங்களில் அப்புறப்படுத்தினார்.
ரீஜண்ட் பார்க் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை துண்டிக்கப்பட்ட தலை, பாலித்தீன் பையில் இருந்ததை, அப்பகுதி மக்கள் பார்த்து, உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், குளம் அருகே பெண்ணின் உடல் மற்றும் பிற பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது" என்றார்.