இந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்வது திருப்பதி ஏழுமலையான் கோயில். இங்குள்ள பெருமாளை வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். இதையடுத்து, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
25 கிலோ தங்க நகைகள்:
ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் இருந்தும் வட இந்தியாவில் இருந்தும் பக்தர்கள் மிக அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதையடுத்து, மகாராஷ்ட்ராவில் உள்ள புனே நகரில் இருந்து ஒரு குடும்பத்தினர் திருப்பதிக்கு சாமி தரிசனம்் செய்ய வந்தனர்.
ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் சாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் தங்கள் உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த நகைகள் மட்டும் மொத்தம் 25 கிலோ தங்க நகைகள் ஆகும்.
சக பக்தர்கள் ஆச்சரியம்:
அந்த ஆண்கள் இருவரும் தங்களது கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளை அணிந்திருந்தனர். உடன் வந்திருந்த பெண்ணும் தங்க ஆபரண நகைகளை அணிந்திருந்தார். கழுத்து மட்டுமின்றி கைகளிலும் அந்த ஆண்கள் இருவரும் நகை அணிந்திருந்தனர். இவர்களை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
மேலும், திருப்பதிக்கு விநோதமாக சாமி கும்பிட வந்திருந்த இவர்களை அங்கு வந்த சக பக்தர்கள் தங்களது செல்போனில் புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.