நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சலுகை:
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதாவது நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா கவுடாவுக்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர் ஆபாசமாக மெசேஜ் செய்துள்ளார்.
இதுதொடர்பாக பவித்ரா கவுடா அளித்த புகாரில் நடிகர் தர்ஷன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரேணுகாசுவாமியை காரில் கடத்தி வந்து பெங்களூரில் வைத்து சித்ரவதை செய்து கொன்றனர். அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டது. இந்த சம்பவம் ஜூன் 9 ம் தேதி நடந்தது. கொலையான ரேணுகா சுவாமி நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர்.
அதாவது தர்ஷன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கு பவித்ரா கவுடா தான் காரணம் என ரேணுகா சுவாமி அவரை திட்டி ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நிலையில் இந்த கொலை என்பது நடந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர்.
7 பேர் சஸ்பெண்ட்:
இச்சூழலில் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்தவகையில் தர்ஷன் சிறையில் சிகரெட் பிடிக்கும் போட்டோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதேபோல் அவர் வீடியோ கால் பேசுவது போன்ற வீடியோவும் வெளியானது. இந்நிலையில் தான் நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.