கடந்த சில நாட்களுக்கு முன்பாக இணையத்தை மிகவும் வலம் வந்த வீடியோக்களில் ஒன்று ஒரு தாய் தன் மகளை 35 ஆயிரம் ரூபாய்க்கு பெல்ட் வாங்கியதற்கு திட்டும் வீடியோ. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சபி குப்தா என்ற பெண் குஸ்ஸி பெல்ட்டை 35 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்தப் பெல்ட் வந்துடவுடன் அதை பிரித்து தன்னுடைய தாயிடம் காட்டியுள்ளார். அப்போது அவரது தாய் விலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு 35 ஆயிரம் என்று சபி கூறியவுடன் அவரை தாய் மிகவும் கோபமாக திட்டியுள்ளார். இந்த வீடியோவை சபி குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை கிட்டதட்ட 3 மில்லியன் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வீடியோவை வைத்து மத்திய அரசின் செய்தித் தொடர்பு நிறுவனமான பிஐபி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தடுப்பூசி விழிப்புணர்வு பதிவை செய்துள்ளது. அதில்,"மிகவும் விலை உயர்ந்த பெல்ட் வாங்கினால் அது அம்மாவை கோபம் அடைய செய்யும். கொரோனா தடுப்பூசி அரசின் மையங்களில் இலவசமாக செலுத்தப்படுகிறது. இதை நீங்கள் செலுத்தி கொண்டால் கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். அத்துடன் உங்களுடைய அம்மா மகிழ்ச்சியாக இருப்பார். மேலும் உங்களுடைய குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும்" எனப் பதிவிட்டுள்ளது.
அத்துடன் அந்த வைரல் வீடியோவில் வரும் அம்மாவின் படத்தையும் இந்தப் பதிவு உடன் சேர்த்து இட்டுள்ளது. மத்திய அரசு கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை அடிக்கடி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பிஐபி ட்விட்டர் கணக்கு இது தொடர்பான விழிப்புணர்வை முன்னெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி தொடர்பாக பரப்பப்பட்டு வரும் போலி செய்திகளையும் பிஐபி ட்விட்டர் கணக்கு அவ்வப்போது தெளிவு படுத்தி வருகிறது. தற்போது ஒரு ஜாலியான வீடியோவை எடுத்து தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை செய்துள்ளது அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Assam Newborn Baby : அசாமில் 5.2 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை