இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல் மட்டத்துக்கு 6 ஆயிரம் மீட்டருக்குக் கீழ் சென்று ஆய்வு செய்யக்கூடிய புதிய வாகனத்தை வடிவமைக்கவே, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பங்களிப்பு கேட்கப்பட்டுள்ளது. மூன்று பேர் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ள இந்த சிறப்புவாகனத்துடன் உலோகத்தாதுக்கள் அடங்கிய திரள்களைக் கண்டறியக்கூடிய உணர்விகளும் இருக்கும்படி வடிவமைக்கப்படும். இந்த உணர்விகள், கடலுக்கு அடியில் இருக்கும் தாமிரம், நிக்கல், கோபால்ட், மாங்கனீசு போன்ற பெரு மதிப்புடைய உலோகங்களைக் கண்டுபிடிக்கக்கூடிய திறன் படைத்தவையாக இருக்கும். 


இத்திட்டத்தில் இதுதான் முதன்மையான நோக்கம் என்றாலும்கூட, மொத்தம் ஆறு நோக்கங்களைக் கொண்ட, இந்த 4, 077 கோடி ரூபாய் ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்த்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த புதனன்று ஒப்புதல் அளித்தது. 


உலக அளவிலும் ஆழ்கடலில் கிடக்கும் இயற்கை வளங்களை ஆய்வுசெய்வதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு, தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஐநா அமைப்பின் சார்பில் இதற்காக பன்னாட்டு கடல்படுகை ஆணையம் எனும் தனி அமைப்பு ஆழ்கடலில் வளங்களைத் தோண்டுவது தொடர்பான தனியான விதிகளை உருவாக்கிவருகிறது. இந்த சூழலில் இந்திய அரசுக்கு இதற்கான தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. 


Telangana Lockdown : லாக்டவுனை திரும்பப்பெற்றது தெலங்கானா! - முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவிப்பு






”ஆழ்கடல் தோண்டியெடுத்தல் தொழில்நுட்பங்களையும் ஆழ்கடல்மூழ்கி வாகனத்தையும் வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. இப்படியான தொழில்நுட்பங்கள் நீண்டகால நோக்கில் இயல்பான தேவையானவை. ஆனால் இப்போது நம் கைவசம் இல்லை; நாமே உருவாக்கியாக வேண்டும்.”என்கிறார், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.இரஜீவன்.


இதில், ஆழ்கடல் ஆய்வு வாகனத்தை உருவாக்குவதில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்- ஐஎஸ்ஆர்ஓவுடன் வேறு சில தொழில் நிறுவனங்களும் கூட்டுசேர்கின்றன. கடலுக்கு அடியில் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இருக்கும் மிக அதிகமான அழுத்தத்தைத் தாங்கக்கூடிய வகையில், முழுவதும் டைட்டானியத்தால் ஆன உருவாக்கப்படும். ஆக்சிஜன் வழங்கல் அமைப்பு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இருக்கமுடியாது. கடலுக்கு அடியில் கண்காணிக்கக்கூடிய கருவிகள், அமைப்புகளையும் மின்னனு வசதியையும் கொண்டிருக்கும். 


இதில் இணைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆய்வு நிறுவன அறிவியலாளர்கள் ஏற்கெனவே புவிவட்டப் பாதைக்கு அப்பால் விண்வெளியில் செல்லக்கூடிய வாகனத்தை உருவாக்கும் திறனைக் கொண்டவர்கள். விண்ணுக்கு மனிதர்களால் இயக்கப்படும் ஏவுவாகனத்தை உருவாக்கும் அவர்கள், பூமிக்கு அதாவது கடலுக்குள் செல்லக்கூடிய வாகனத்தின் பாதுகாப்பு அமைப்புகளை வடிவமைக்கமுடியும் என்றும் இரஜீவன் கூறியுள்ளார். 


இதற்கான தொழில்நுட்பத்தைப் பெறுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஜப்பான் அரசுகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அவை இரண்டுமே அந்தத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டன. ஆனால் இப்போது ரசியாவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. அது வெற்றிபெற்றால் புதிய திட்டத்துக்கு உதவியாக அமையும். 




இத்திட்டத்தின் இன்னொரு முக்கிய வேலை, இந்தியப் பெருங்கடலில் உள்ள கடல்மலைச் சிகரங்களுக்கு இடையே வெப்பநீர்ப் போக்கிடங்களைக் கண்டறிவதும் ஆகும். அவற்றின் மூலம் கடலுக்கடியில் இருக்கும் தாதுவளத் திரளைக் கண்டுபிடித்துவிட முடியும்.
 
இதற்கான சிறப்பு வாகனமானது முக்கியமாக கிட்டத்தட்ட 500 டிகிரி செல்சியஸ்வரையிலான வெப்பத்தைத் தாங்கக்கூடியதாக உருவாக்கப்படும். உள்நாட்டுக் கப்பல் கட்டும் தளம் ஒன்றில் இதை உருவாக்கிமுடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.