ராஜஸ்தானின் அஜ்மீரில் திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்ற நபரின் மூக்கை அறுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






திருமணமான பெண்ணுடன் குடும்பம்:


நாகூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தை குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வீடியோ பகிர்ந்துள்ளார். பர்பத்சரில் வசிக்கும் அந்த நபர், ஜனவரி மாதம் திருமணமான ஒரு பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி அஜ்மீரில் வசித்து வந்தார். அவர்கள் அஜ்மீரில் வசித்து வருவதை தெரிந்த பெண்ணின் குடும்பத்தினர் ஒன்றாக சென்று அந்த நபரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச்சென்று  விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரம் மூலம் மூக்கை அறுத்துள்ளனர். 






மூக்கறுப்பு:


இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீஸில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தார். அந்த புகாரில் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், மாரோத் ஏரிக்கு அருகில் அவரை அழைத்துச்சென்று மூக்கை அறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை ஒரு படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலானதையடுத்து குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


 "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில், திருமணமான பெண் தனது காதலரான ஹமீத்துடன் தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதை அறிந்த அந்த பெண்ணின் தந்தை, இருவரையும் பிரித்து, பெண்ணின் சகோதரர்கள் மற்றும் தந்தை என ஐந்து பேர் ஹமீதை கடுமையாக தாக்கிவிட்டு மூக்கை வெட்டியுள்ளனர்" என அஜ்மீர் பகுதியின் ஐஜி ரூபிந்தர் சிங் தெரிவித்தார்.  


 இது தொடர்பாக அஜ்மீரில் உள்ள கோக்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வீடியோ வைரலானவுடன் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக நாகூர் காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஜோஷி தெரிவித்தார்.