சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தானின் தீவிர ஆதரவாளரான அம்ரித் பால்சிங்கை கைது செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரிஸ் பஞ்சாப் டி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ள இவர், கடந்த 5 நாள்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். 


அம்ரித் பால் சிங்கை கைது செய்ய ஆபரேஷன்:


இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அம்ரித் பால் சிங்கை கைது செய்ய எடுத்து வரும் ஆபரேஷனின் ஒரு பகுதியாக 154 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 


இதுகுறித்து பஞ்சாப் தலைமை காவல்துறை ஆய்வாளர் சுக்செயின் சிங் கில் கூறுகையில், "அம்ரித் பால்சிங் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மன்பிரீத் சிங், குர்தீப் சிங், ஹர்ப்ரீத் சிங் மற்றும் குர்பேஷ் சிங் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 


சினிமா பாணியில் தப்பியோட்டம்:


ஒரு .315 துப்பாக்கி, ஒரு வாக்கி-டாக்கி மற்றும் சில வாள்களும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. காவல்துறை அவரை துரத்திய போது, அம்ரித் பால் சிங் குருத்வாராவிற்குச் சென்று, அங்கு தனது ஆடைகளை மாற்றியுள்ளார். சட்டை மற்றும் கால்சட்டை அணிந்து கொண்டு மூன்று உதவியாளர்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர்.


அடையாளம் தெரியாமல் இருக்கும் வகையில் அவர் தனது தோற்றத்தை மாற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வாரிஸ் பஞ்சாப் டி இயக்கத்தின் நிர்வாகிகள் என குற்றம்சாட்டப்பட்டுள்ள குல்வந்த் சிங் தலிவால், குரீந்தர் பால் சிங் ஆகியோர் அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


அங்கு ஏற்கனவே ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான அம்ரித் பால் சிங்கின் மாமா ஹர்ஜித் சிங்குக்கு எதிராக ஒரு தனி வழக்கு பஞ்சாப் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஹர்ப்ரீத் என்பவருடன் சேர்ந்து தனக்கு தங்குமிடம் வழங்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவரை ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார்" என்றார்.


பஞ்சாப் முதலமைச்சர் விளக்கம்:


அம்ரித் பால் சிங்கை கைது செய்யும் வகையில், பஞ்சாபின் பெரும்பாலான பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டிருந்தது. தற்போது, பெரும்பாலான பகுதிகளில் இணையம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மோகா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், சங்ரூர், அமிர்தசரஸில் உள்ள அஜ்னாலா மற்றும் மொஹாலியின் சில பகுதிகளில் நாளை நண்பகல் வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன.


இதுகுறித்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறுகையில், "எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. பிரச்னையை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் 100% மதச்சார்பற்ற கட்சி. மதம் மற்றும் ஜாதியின் பெயரால் நாங்கள் அரசியல் செய்யவில்லை. எனது ஒவ்வொரு துளி ரத்தமும் பஞ்சாபிற்காக இருக்கிறது என்பதை பஞ்சாப் மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.


வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் வெறுப்பூட்டும் பேச்சில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுத்தது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். வாரிஸ் பஞ்சாப் டி இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை மார்ச் 18ஆம் தேதி தொடங்கியது" என்றார்.