கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா. இவர் நேற்று அந்த மாநிலத்தின் துமகூரு துருவகெரேயில் பாரதிய ஜனதா கட்சியின் விஜய் சங்கல்ப் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்ற போது ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது குறுக்கே இரண்டு நாய்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


துமகூரு மாவட்டம் துருவகேரெயில் பா.ஜ.க வின் விஜய் சங்கல்ப் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதற்காக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். அப்போது திட்டமிட்டபடி எந்த இடையூறும் இல்லாமல் துருவகேரெயிற்கு சென்றடைந்தார்.


குறுக்கே வந்த தெருநாய்கள்:


அப்போது ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீர் என பாதுகாப்பு படையினரை மீறி இரண்டு தெரு நாய்கள் குறுக்கே நுழைந்தது. ஹெலிகாப்டர் தரையிறங்குவதை கண்டு இரண்டு நாய்களும் குரைக்கத் தொடங்கியது. அப்போது ஹெலிகாப்டரை இயக்கிய பைலட், நாய்கள் பாய்ந்துவிடுமோ என அச்சமடைந்தனர். கண் இமைக்கும் நொடியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உடனே அங்கிருந்த பாதுகாப்பு படையினர் இரண்டு நாய்களையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். அதன் பின் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. தரை இறக்கத்தின் போது நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






அதேபோல் மார்ச் 6 ஆம் தேதி  முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தை நெருங்கியதும் பிளாஸ்டிக் தாள்கள் மற்றும் தார்பாய் துண்டுகள் காற்றில் பறக்கத் தொடங்கியது. இந்த குப்பைகள் காற்றில் பறக்கத்தொடங்கியதால் விமானி ஹெலிகாப்டரை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சற்று நேரம் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது அந்த ஹெலிகாப்டர். அந்த குப்பைகளை அகற்றிய பின்  ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. மீண்டும் இதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.