பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தமிழர்களைக் குறித்து பேசியதைப் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், `என் தமிழ் சகோதர, சகோதரிகள் லட்சக்கணக்கில் சாலையில் திரண்டு, மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் உடல் விமான நிலையத்திற்கு எடுத்துச் சென்ற போது, கண்களில் கண்ணீரோடு `வீரவணக்கம்.. வீரவணக்கம்’ என முழக்கமிட்டுச் சென்றனர். இது தேசத்தின் அடையாளம்’ எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்’ என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 2 அன்று, நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஆள முடியாது. நாட்டின் அடிதளத்தோடு ஆர்.எஸ்.எஸ் விளையாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி, கலாசாரம், வரலாறு குறித்த புரிதல் இருக்கிறது. அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன். நீட் தேர்வில் தமிழகம் தொடர்ந்து விலக்கு கோருகிறது. ஆனால் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் தொடர்ந்து மனம் தளராமல் தமிழகம் கேட்டுக்கொண்டுக்கிறது” எனப் பேசினார். இது வைரலானது.



இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்திக்குப் பதிலளித்துப் பேசினார். அதில் அவர், `சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டு மக்களின் உணர்வைத் தூண்டி அரசியல் செய்ய முயற்சி செய்தது. காங்கிரஸ் கட்சியை இந்தியாவைப் பிரிக்க திட்டமிடுகிறது. அவர்களின் கொள்கையே பிரித்தாளும் சூழ்ச்சி தான். என் தமிழ் சகோதர, சகோதரிகள் லட்சக்கணக்கில் சாலையில் திரண்டு, மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் உடல் விமான நிலையத்திற்கு எடுத்துச் சென்ற போது, கண்களில் கண்ணீரோடு `வீரவணக்கம்.. வீரவணக்கம்’ என முழக்கமிட்டுச் சென்றனர். இது தேசத்தின் அடையாளம். முப்படைத் தளபதியைக் காப்பாற்றுவதற்காகத் தமிழர்கள் பல மணி நேரங்கள் காத்திருந்தனர். இது என்னுடைய நாடு என்று நான் சொல்வதை காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே வெறுத்து வருகிறது. பிரித்தாள்வது என்பது காங்கிரஸின் டி.என்.ஏவில் இருக்கிறது’ எனக் கடுமையாக சாடியுள்ளார்.







பிரதமரின் இந்தப் பேச்சைத் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ்.