காதல் என்பது ஒருவரை என்ன வேண்டுமென்றாலும் செய்ய வைக்கலாம். அப்படி ஒரு தம்பதி தங்களுடைய காதலுக்காக செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் உறைந்து போக வைத்துள்ளது. கேரளாவில் காதலை பறைசாற்ற பல காதல் திரைப்படங்கள் வந்தாலும் பிரேமம் திரைப்படம் கேரள ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு இளைஞர்களையும் ஈர்த்தது. அதற்கு காரணம் அந்தப் படத்தின் கதைதான். தற்போது அதற்கு பிறகு மீண்டும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் மற்றொரு கேரள காதல் கதை நடந்தேறியுள்ளது.


கேரள மாநிலத்தின் பாலக்காடு பகுதியின் அயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சஜிதா. இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு காணாமல் போனதாக இவருடைய பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமாக தேடி உள்ளனர். எனினும் அவரை எங்கும் கண்டறிய முடியவில்லை. இந்தச் சூழலில் தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு வேறு வழக்கில் விசாரணை நடத்திய போது காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அப்பெண் 11 ஆண்டுகளாக தனது வீட்டிற்கு 500 மீட்டர் தொலைவில் இருந்த பக்கத்து வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்.  இருப்பினும் அவரை பதினொரு ஆண்டுகளாக யாராலும் கண்டறியமுடியவில்லை. அவர் எப்படி அப்படி மறைந்து வாழ்ந்தார்? எதற்காக அப்படி வாழ்ந்தார்?


இதுதொடர்பாக அந்த காதல் ஜோடி, அவர்களின் உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தளத்திற்கு பேட்டியளித்துள்ளனர். அதன்படி நென்னமரா காவல்துறை ஆய்வாளர், "சஜிதா-ரஹ்மான் தம்பதியின் காதல் மிகவும் வித்தியாசமான ஒன்று. அவர்கள் இருவர் தொடர்பாக தற்போது நாங்கள் அவர்கள் வீடுகளுக்கு சென்று விசாரித்தோம். அப்போதுதான் எங்களுக்கு உண்மை தெரியவந்தது. 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருநாள் இரவு சஜிதா தனது வீட்டிலிருந்து வெளியேவந்து ரஹ்மான் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். ரஹ்மான் வீட்டில் ஒரு பூட்டிய அறைக்குள் இவர் நீண்டநாட்களாக வசித்து வந்துள்ளார். இதனால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.




பொதுவாக ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு சென்றால் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் சென்றிருப்பார்கள். ஆனால் இங்கு ரஹ்மான் தன்னுடைய வீட்டிலேயே இருந்ததால் எந்தவித சந்தேகமும் அவர் மீது எங்களுக்கு வரவில்லை. மேலும் அக்கம்பக்கத்தில் விசாரித்த போதும் யாருக்கும் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருந்தது என்று கூட தெரியவில்லை. இதனால் நாங்கள் சஜிதா தமிழ்நாடு அல்லது வேறு சில அண்டை மாநிலங்களுக்கு காதலனுடன் தப்பி சென்று இருக்கலாம் என்று நினைத்து விசாரித்து வந்தோம்" எனக் கூறியுள்ளார். 


ரஹ்மானின் அண்ணன் பஷீர்,"என்னுடைய தம்பியை கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. இது தொடர்பாக நான் காவல்துறையில் புகார் அளித்திருந்தேன். இந்தச் சூழலில் கடந்த வாரம் நான் ரஹ்மானை ஒரு சந்தையில் பார்த்தேன். அதன்பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவனை கண்டுபிடித்தோம். அப்போதுதான் அவனும் சஜிதாவும் சேர்ந்து, மற்றொரு கிராமத்தில் வசித்து வருவது தெரிந்தது. அத்துடன் அவர்கள் இருவரும் 11 ஆண்டுகளாக எங்களுடைய வீட்டிலேயே வசித்து வந்ததும் எனக்கு தெரியவந்தது. என்னுடைய தம்பி எப்போதும் யாரிடமும் அதிகம் பேச மாட்டான். இதனால் அவன் தன்னுடைய அறைக்குள் இருப்பான். இதன் காரணமாக அவன் மீது எங்களுக்கு சந்தேகம் வரவில்லை. அத்துடன் அவன் அறையை எப்போதும் பூட்டி வைத்திருப்பான். அதை நாங்கள் திறக்க முற்பட்டால் எங்கள் மீது கோபம் கொள்வான். அதனால் நாங்கள் அவனை கண்டு கொள்ளவில்லை. மேலும் என்னுடைய தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் காலை வேலைக்கு சென்றால் இரவில்தான் வருவார்கள்" எனத் தெரிவித்தார். 




இந்த காதல் இணையை உள்ளூர் நீதிமன்றம் முன்பாக காவல்துறை ஆஜர்படுத்தியது. அப்போது ரஹ்மான், "நாங்கள் இருவரும் வேறு ஜாதி மற்றும் மதம் என்பதால் எங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு வரும் என்று நினைத்தோம். இதனால் தான் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்ந்து வந்தோம்" எனக் கூறினார். நீதிபதி சஜிதாவின் விருப்பத்தை கேட்டபோது அவர் ரஹ்மானுடன் வசிக்க விருப்பம் தெரிவித்தார். இதனால் காதல் இணையர் இருவரும் தற்போது இருக்கும் இடத்தில் வசிக்க நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. ஒரு பூட்டிய அறைக்குள், ஒரு சிறிய டிவியுடன் மட்டும் சஜிதா 11 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்துள்ளார். அவரிடன் மொபைல்ஃபோன் கூட இல்லை என்று கூறப்படுகிறது. இந்தக் காதல் ஜோடியை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.


மேலும் படிக்க: ”கல்விதான் எல்லாம்” : கட்டாக் நகரின் முதல் பெண் சொமேட்டோ ஊழியர் பிஷ்ணுபிரியாவின் கதை!