Kerala-Wayanad Landslides ISRO Image: கேரளம் நிலச்சரிவில் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் சரிந்துள்ளது என்றும், இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு குப்பைகள் அடித்துச் செல்லப்படுவதையும் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் இஸ்ரோ காட்டியுள்ளது.
நிலச்சரிவு செயற்கைக்கோள் புகைப்படம்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) அனுப்பிய செயற்கைக்கோள்களான கார்டோசாட்-3, RISAT பயன்படுத்தி, புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் மேகத்தின் உள்ளே ஊடுருவி புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டவை என கூறப்படுகிறது.
இஸ்ரோ தெரிவித்துள்ள அறிக்கையின்படி, கடல் மட்டத்திலிருந்து 1550 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு தொடங்கியுள்ளது. நிலச்சரிவானது 86,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு குப்பைகள் தோராயமாக 8 கிலோமீட்டர் நீளம்வரை அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.
இஸ்ரோ "இந்தியாவின் நிலச்சரிவு அட்லஸ்" ஒன்றை தொகுத்துள்ளது, இது 20 ஆண்டுகளில் நிகழ்ந்த 80,000 நிலச்சரிவுகளை ஆவணப்படுத்துகிறது மற்றும் புதுமலை, வயநாடு மாவட்டம் மற்றும் கேரளாவின் பெரும்பகுதி நிலச்சரிவுகளுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் உயிரிழப்பு:
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி பகுதியைச் சுற்றியுள்ள முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா, நூல்புழா உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் அப்பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளது.
இரண்டு நாட்களாக மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 290-ஐ எட்டியுள்ளது. மாயமானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மோசமான வானிலைக்கு இடையே 3-வது நாளாக ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர், 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.