கேரளம் வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.
ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு:
நிலச்சரிவு பாதிப்புகளை கூட்டாக ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி நேரில் பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது, அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார். தற்போது , வயநாடு மக்களை மட்டுமே கவலை கொண்டுள்ளேன்.
எனது தந்தை இறந்தபோது எந்தளவு துக்கம் அடைந்தேனோ, அதே துக்கத்தை தற்போது மீண்டும் அடைந்துள்ளேன்.
கேரளா மற்றும் தேசத்திற்கு இது ஒரு பயங்கரமான சோகம். நிலைமையைப் பார்க்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். இது வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு உதவ முயற்சிப்போம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா கூறுகையில், "நாங்கள் ஒரு நாள் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தோம். இது ஒரு பெரிய சோகம். மக்கள் படும் வேதனையை நாம் கற்பனை செய்து பார்க்க முடியும். நாங்கள் இங்கே இருக்கிறோம். இமாச்சலப் பிரதேசத்திலும் ஒரு பெரிய சோகம் நடந்துள்ளது.
குறிப்பாக இப்போது தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு நாங்கள் எப்படி உதவுவது என்று திட்டமிட்டு வருகிறோம் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
அதிகரிக்கும் உயிரிழப்பு:
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி பகுதியைச் சுற்றியுள்ள முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா, நூல்புழா உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் அப்பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளது.
இரண்டு நாட்களாக மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 290-ஐ எட்டியுள்ளது. மாயமானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மோசமான வானிலைக்கு இடையே 3-வது நாளாக ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர், 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.