Kerala Landslide: கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியுள்ளது.


300-ஐ நெருங்கும் உயிரிழப்பு:


வயநாடு பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக, கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை அங்கு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. உறங்கிக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடரில் ஏராளமானோர் காணாமல் போயினர். தொடர்ந்து, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடங்கி ராணுவம் வரை, நான்காவது நாளாக மிட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தற்போது வரை 298 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோரை தேடும் பணி தொடர்வதால், பலி எண்ணிக்கை 300-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொழில்நுட்ப உதவியுடன் தேடல்:


ஏற்கனவே, காணமல் போனவர்களை மோப்ப நாய்களை கொண்டு மீட்பு படையினர் தேடி வந்தனர். இந்நிலையில், ரேடார் கொண்ட டிரோன்கள் மற்றும் தெர்மல் ஸ்கேன்னர் போன்ற தொழில்நுட்ப கருவிகளை கொண்டு, தேடும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் பொக்லைன்களை மீட்பு பணியில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


60 தமிழர்களின் நிலை என்ன்?


நிலச்சரிவு காரணமாக முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேப்பாடு ஆகிய கிராமங்கள், கடும் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. அங்கிருந்து பெரும்பாலான வீடுகள் மண்ணோடு மண்ணாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே, இந்த விபத்தில் அந்த கிராமப் பகுதிகளில் தங்கியிருந்த 10-க்கும் மேற்பட்ட தமிழர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும், 60-க்கும் மேற்பட்ட தமிழர்களை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேநேரம், பொதுமக்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதால், காணாமல் போன பலரும் உயிருடன் இருக்கக் கூடும் எனவும் நம்பப்படுகிறது.


27 மாணவர்கள் உயிரிழப்பு:


வயநாட்டில் முண்டக்கை கிராமத்தில் உள்ள அரசு முதன்மை பள்ளி மற்றும் சூரல்மலா கிராமத்தில் உள்ள வெள்ளர்மலா பகுதியில் அரசு மேனிலை பள்ளி ஒன்றும் நிலச்சரிவால் கடுமையாக சேதமடைந்தன. 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 23 மாணவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். இதில், சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 32 பேரும், முண்டக்கை பள்ளியில் படித்து வந்த 18 பேரும் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளனர். 


தற்காலிக மேம்பாலம் நிறைவு:


சூரல்மலையில் நடைபெற்ற மீட்புப் மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமடைய உள்ளன. இதற்காக அங்குள்ள நதியின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற உள்ளது. கனமழை தொடர்வதால் வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஏர்டெல் நிறுவனம் இலவச சேவை:


நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி இலவச டேட்டா ஒருநாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். இலவசம். மேலும், ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, வயநாடு வாடிக்கையாளர்களுக்கான பில் செலுத்தும் காலக்கெடு மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாவிட்டாலும், அடுத்த ஒரு மாதத்திற்கு சேவைகளை பயன்படுத்தலாம். 2 மாதங்களுக்கான கட்டணத்தையும் அடுத்த மாதம் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.