சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய நேரத்தில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு சந்திராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆராயும் நோக்கத்தில் கடந்த 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் செலுத்தியது. 40 நாட்கள் பயணத்திட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்றும் முன் தினம் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப்பகுதியில் திட்டமிட்டப்படி தரையிரங்கியது. சந்திரயான் 3 திட்டத்தின் மிக முக்கிய நிகழ்வான விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது 8 கட்டங்களாக நடைபெற்றது. இதன் மூலம் நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே நிலவை தொட்டன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்ததுடன், இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பை கொண்டாடினர். ஆடல் பாடலுடனும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் இஸ்ரோவின் சாதனை கொண்டாடப்பட்டது. நாட்டை ஆளும் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை சந்திராயன் -3 வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த வகையில் நிலவின் தென் துருவப்பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய அந்த தருணத்தில் இந்தியாவில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு சந்திராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா படைத்த சரித்திர சாதனையை நினைவு கூறும் விதமாக, ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனையில் பிறந்த ஒரு பெண் குழந்தை உட்பட நான்கு குழந்தைகளுக்கு சந்திரயான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா வரலாற்று சாதனை படைத்த நேரத்தில் தங்களின் குழந்தைகள் பிறந்ததால் அவர்களுக்கு சந்திரயான் என பெயர் வைப்பதை பெருமையாக கருதுவதாக குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Partner Movie Review: நீண்ட இடைவெளிக்கு பின் கம்பேக் கொடுத்தாரா ஆதி? - எப்படி இருக்கு பாட்னர் திரைப்படம்: முழு விமர்சனம்!