கனடா உடனான பிரச்னைக்கு மத்தியில் தீவிரவாதிகளுக்கு இடமளிக்காதிர்கள் என தொலைக்காட்சி ஊடகங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு அறிவுரை:
காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா இடையேயான கருத்து மோதல் வலுப்பெற்று, இருநாடுகளும் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த சூழலில், இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார். இதன் விளைவாக தான், தீவிரவாதத்துடன் தொடர்புடைய நபர்களை நேர்காணல் செய்வதைத் தவிர்க்குமாறு தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
அரசு சொல்வது என்ன?
இதுதொடர்பாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், இந்திய சட்டத்தால் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதம் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் உள்ள, வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒரு தொலைக்காட்சியின் விவாதத்திற்கு அழைக்கப்பட்டது அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. நாட்டின் இறையாண்மை/ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, வெளி நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு மற்றும் நாட்டில் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ள பல கருத்துக்கள்/கருத்துகளை மேற்படி நபர் கூறியுள்ளார்.
அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்துகிறது மற்றும் அரசியலமைப்பின் கீழ் அதன் உரிமைகளை மதிக்கிறது. தொலைகாட்சி ஊடகங்களால் ஒளிபரப்பப்படும் உள்ளடக்கம் பிரிவு 20 இன் துணைப் பிரிவு (2) உட்பட CTN சட்டம், 1995 இன் விதிகளுக்கு இணங்க வேண்டும்.
மேற்கூறியவற்றின் அடிப்படையில் கடுமையான குற்றங்கள்/தீவிரவாத குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட அத்தகைய பின்னணியில் உள்ள நபர்களின் அறிக்கைகள்/குறிப்புகள் மற்றும் பார்வைகள்/நிகழ்ச்சி நிரல்களுக்கு எந்த தளத்தையும் வழங்குவதைத் தவிர்க்குமாறு தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் அரசியலமைப்பின் 19(2) பிரிவின் கீழ் விதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகள் மற்றும் CTN சட்டத்தின் பிரிவு 20 இன் துணைப்பிரிவு (2) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நியாயமான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்ட்ன் பாதுகாப்பு, எந்தவொரு வெளிநாட்டுடனான இந்தியாவின் நட்புறவு அல்லது பொது ஒழுங்கு அல்லது அறநெறி ஆகியவற்றின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது” என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்?
குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சீக்கிய தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் சீக்கியர்களுக்கான நீதிக் குழுவின் தலைவராக உள்ளார். 2019 இல் காலிஸ்தான் ஆதரவு குழு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பன்னுன் இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். காலிஸ்தான் விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி கனடாவை சேர்ந்தவர்களுக்கான விசா சேவைகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. கனடா தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாகவும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.