தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்தநாள் வெளியிடப்படுவதுபோல ஒவ்வொரு ஆண்டும், ஓணத்திற்கு அடுத்த நாள், கேரள மாநில பானங்கள் கழகம் (பெவ்கோ) மது விற்ற கணக்கு வெளியிடுகிறது. இதுபோன்ற விழாக்காலங்களின்போது விற்பனை வெகுவாக உயரும். தமிழகத்தை போலவே கேரளாவும் வருடா வருடம் முந்தைய ஆண்டின் சாதனைகளை முறியடிக்கும். இம்முறை, கேரளாவில் பெவ்கோ எடுத்த கணக்கின்படி ஓணத்தின் போது 750 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக கூறுகிறது.



கொரோனா தொற்று எண்ணிக்கைகள் அதிகமாக இருந்தபோதும், கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தாலும், கேரள மக்கள் இந்த ஆண்டு பெரிய அளவிலான மது ஆர்டர்களுடன் மாநிலத்தின் கஜானாவில் சேர்த்திருக்கிறார்கள். 85 கோடிக்கு மதுபானங்கள் விற்று உத்திராடம் நாளான ஆகஸ்ட் 20 -ம் தேதி விற்பனைகளில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ஏனெனில் திருவோணம் அன்று அம்மாநிலத்தில் பெவ்கோ விற்பனை நிலையங்கள் மூடப்படும். திருவோணமான ஆகஸ்ட் 21 ஓணத்தின் முக்கிய தினம் என்பதால் அதற்கு ஆயத்தமாக முந்தைய தினமே பலர் மது வாங்கி வைத்ததால் அந்த தினம் அதிக விற்பனை எண்ணிக்கை பெற்றிருக்கிறது.


கோழிக்கோடு, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் பெவ்கோவின் மூன்று கடைகளில் தலா ஒரு கடையை ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்தை குறைக்க பெவ்கோவால் முன்னெடுக்கப்பட்ட ஆன்லைன் அமைப்பு கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. பைலட் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று இடங்களில் இயங்கியது. இருப்பினும், மதுபானம் நேரடியாக விசேட்டிற்கு விநியோகம் இல்லை, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நபர்கள் அதை கடையிலிருந்து சேகரித்துக்கொள்ள வேண்டும். அதனை பயன்படுத்த விரும்புவோர் தங்கள் தங்கள் மாவட்டத்தை குறிப்பிட்டு, ஆப்பில் புதிய கணக்கு துவங்கி தங்கள் ஆர்டர்களைச் செய்ய வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தியதும், பொருட்களை எடுத்துச் செல்ல அவர்களுக்கு ஒரு நேர இடைவெளி குறிப்பிடப்பட்டு, இந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஒரு குறுஞ்செய்தி வரும்.



பைலட் திட்டம் வெற்றிகரமாக இயங்கிய பிறகு, ஓணத்தின் போது உருவாகும் பெரிய கூட்டத்தை எதிர்கொள்ள இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டது. 2020 ஆம் ஆண்டில், அந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோய் தாக்கிய போதிலும் ரூ. 520 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ரூ 487 கோடியாக இருந்தது.


சென்ற வருடம் கோவிட் -19 நெறிமுறையைப் பின்பற்றாமல் மதுபானகடைகளுக்கு வெளியே கூட்டம் இருப்பதற்காக கேரள உயர் நீதிமன்றம் அரசாங்கத்தை விமர்சித்த பிறகு இந்த ஆண்டு இதுபோன்ற ஆன்லைன் அமைப்பு அமல்படுத்தப்பட்டது.