கேரளாவில் புதிய முயற்சியாக, மாநில தொழிலாளர் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவை துவங்கப்பட்டு உள்ளது.


கேரளா சவாரி ஆப்


இந்த புதிய திட்டம் நேற்று கேரள முதல்வர் பிணராயி விஜயனால் கொடி அசைத்து துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கேரளாவில் இருக்கும் ஆட்டோ ரிக்ஷா டாக்சி நெட்வொர்க்குகளை மாநில அரசு இணைத்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பாக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி தொழிலாளர்களுக்கும் இதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டவும், தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள் பெறவும் முடியும்.



குறைந்துவிட்ட ஆட்டோ ஸ்டான்ட்கள்


தற்போது எல்லோருமே ஆப் மூலம் கால் டாக்சி புக் செய்வதற்கே விரும்புகிறார்கள். ஏனென்றால் ஆப் மூலம் புக் செய்துவிட்டால், பேரம் பேசும் நிலை இல்லை. மீட்டர் போல அதில் காட்டும் கட்டணத்தை செலுத்தலாம். அதனால் பொதுமக்கள் இடையே இப்போதெல்லாம் தனியாக ஆட்டோ வாடகைக்கு எடுக்கும் வழக்கம் மிகவும் குறைந்து விட்டது. அதனால் தெரு முனைகளில் இருக்கும் ஆட்டோ ஸ்டான்ட்களும் குறைந்து விட்டன.


தொடர்புடைய செய்திகள்: சூரியனுக்கும் வயதாகும்.. இறந்துபோகும்?! விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஷாக் தகவல்கள்!


கட்டண வேறுபாடு


இதனால் பல தொழிலாளர்கள் வேலை இன்றி இருப்பதாக அரசு தெரிவித்தது. ஏனென்றால், வாடிக்கையாளர் பயணத்திற்கு கட்டும் கட்டணத்திற்கும் ஓட்டுனர்களுக்கு வந்து சேரும் தொகைக்கும் இடையில் 20, 30 ரூபாய் வித்தியாசம் ஏற்படுவதால் அவை கட்டுப்படி ஆவதில்லை என்ற குறை பல நாட்களாகவே உள்ளது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.






பயனும் பாதுகாப்பும்


தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பில் ரூ.8 மட்டும் ஒரு சவாரிக்கு சேவைக்கட்டனமாக வசூலிக்கப்படும். அந்த தொகை இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கும், ஆப் மேம்பாட்டுக்கும், ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான இன்சென்டிவ் தொகை வழங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் ஓட்டுநர்களுக்கு காவல்துறை அனுமதிச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆப்பில் ’பேனிக்’ பட்டனும் உள்ளதென்று கூறப்பட்டுள்ளது. ஒரு வேளை ஏதாவது விபத்து நேர்ந்தாலோ, அல்லது வேறு வகையில் ஆபத்து வந்தாலோ இந்த பட்டனை அழுத்தலாம். அது நேரடியாக கட்டுப்பாட்டறைக்கு நமது இருப்பிடத்தை அனுப்பி தகவலை தெரிவிக்கும். இந்த வசதி பாதுகாப்பிற்கு புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. திருவனந்தபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 500 ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள், தற்போது மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த இதர உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.





 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.