கேரளாவிலுள்ள மிகவும் பிரபலம் வாய்ந்த கோயில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயில். இங்கு சிறப்பு பூஜை காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்தவகையில் இன்று நிறபுதாரி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டது. எனினும் கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. 


இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் தற்போது கோயிலில் உள்ள பக்தர்கள் அனைவரும் மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தனாம்திட்டா, பம்பை, சபரிமலை பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதை வலியுறுத்தியுள்ளது. மேலும் கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பேரிடர் மீட்பு படையினரை தயாராக வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக இந்த நிகழ்வு தொடர்பாக கோயில் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர் ஆலோசனை நடத்தினார். அதில் திட்டமிட்டப்படி கோயில் திருவிழா நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பக்தர்களுக்கு அங்கு புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது.


இந்தக் கூடத்தில் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பத்தனாம்திட்டா முதல் எருமேலி வரையிலான சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டது. கேரள போக்குவரத்து கழகம் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துங்களும் விடப்பட்டிருந்தன.


கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள பல ஆறுகளில் நீர் வறத்து மிகவும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக சாலக்குடி ஆற்றிற்கு நீர் வறத்து மிகவும் அதிகமாக உள்ளதால் ஏர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண