2021 சட்டமன்றத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெருவாரியான வெற்றியடைந்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த நிலையில் முதலமைச்சர் விஜயனின் தலைமையிலான புதிய அமைச்சரவை வருகின்ற 20 மே அன்று பதவியேற்கும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே அமைச்சரவையில் பல புதிய மாற்றங்களை அறிவித்துள்ளார் விஜயன். இதன்படி கேரள சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.ஷைலஜா டீச்சர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசின் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்படுகிறார். புதிய அமைச்சரவையில் பழைய அமைச்சரவையின் நீட்சி (continuity) இருக்கும் என்று கூறப்பட்டுவந்த நிலையில் இந்த மாற்றம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மேலும் ‘கொரோனா பேரிடர் காலத்தில் அமைச்சர் ஷைலஜா சிறப்பாகப் பணியாற்றி வந்தார் ஆனால் அவரது பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் கொள்கைப்படி அமைச்சர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படாது அதனால்தான் இந்த மாற்றம் என்றால் முதலமைச்சர் மட்டும் எப்படி இரண்டு முறைப் பொறுப்பேற்கலாம்?’ என்று மக்களிடையே விமர்சனம் எழுந்துவருகிறது. மற்றொருபக்கம் கோழிகோட்டின் பேய்ப்போர் தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற பி.ஏ.முகமது ரியாஸுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு எனக் கூறப்பட்டுவருகிறது. இவர் முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது