கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. எனினும் கேரளாவில் கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக இருந்ததால் புதிய அரசு இதுவரை பதவி ஏற்கவில்லை. அத்துடன் டவ் தே புயலும் காரணமாக மழை பெய்து வந்தால் அரசு நிவாரண பணிகளில் தீவிரம் காட்டி வந்தது.
இந்நிலையில் வரும் வியாக்கிழமை நடைபெறும் விழாவில் புதிய அரசு பதவி ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 20ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் 21 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் 140 எம்.எல்.ஏக்கள் உட்பட 500 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு புதிய அரசின் பதவியேற்பு விழாவை பெரிதாக நடத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் கேரளா பிரிவு கேட்டுக் கொண்டது. எனினும் மருத்துவர்களின் இந்த ஆலோசனையை ஏற்காத அரசு ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.
ஏனென்றால் கேரளாவில் நேற்று 21 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகினர். அத்துடன் கொரோனா உறுதியாகும் சதவிகிதம் 24.74 சதவிகிதமாக உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக 67 பேர் உயிரிழந்தனர். மேலும் கொரோனா தொற்று காரணமாக கேரளா மாநிலம் முழுவதும் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் 23ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளன. அதேபோல் விழா நடைபெற உள்ள திருவனந்தபுரத்தில் டிரிபிள் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் அந்த மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் அங்கு பதவியேற்பு விழாவை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை பினராய் விஜயன் தலைமையிலான அரசி பதவியேற்பு விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இம்முறை அது கொரோனா காரணமாக 500 ஆக குறைந்துள்ளது. பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்த விழா தற்போது நடத்தப்படுகின்ற சூழல் கேரளா அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.