கேரளாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 


தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கியுள்ளது. இதனால் கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்துவாங்குகிறது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் தான் கனமழை பெய்து வருகிறது. இந்த 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோட்டயத்தில் நிலச்சரிவு; 5 பேர் பலி:


கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேரைக் காணவில்லை. 2 மணி நேரத்தில் 5 செ.மீ மழை பெய்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மேக வெடிப்புச் சம்பவமும் நடந்துள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக பீர்மேட்டில் 24 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. செருதூணி, சாலக்குடி, பூஞ்சார் பகுதிகளில் 14 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது. நிலச்சரிவு நடந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கேரள மாநிலத்தில் 11 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம், கண்ணூர், கொல்லம் மாவட்டங்களுக்கு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்திற்கு மட்டும் இரண்டு குழுக்கள் சென்றுள்ளன.




166% அதிகமாக கொட்டித் தீர்த்த மழை:


கேரள மாநிலத்தில் கடந்த அக்டோபர் 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 166% அதிகமாக மழை பெய்துள்ளது. மேக வெடிப்புச் சம்பவங்களால் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


முதல்வர் நம்பிக்கை:


முதல்வர் பினராயில் விஜயன் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டினார். மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதாக தெரிவித்தார். இப்போது நிலைமை மோசமாக இருந்தால் அரசு துரித கதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு நிலைமை சீர்படுத்தும் என்றும் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. பினோய் விஸ்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கேரள மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய நிவாரணங்களை வழங்குமாறு கோரியுள்ளார். 


கேரள மழை வெள்ளம் காரணமாக இன்றும் நாளையும் (அக்..17 மற்றும் 18) ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் என திரிவிதாங்கூர் தேவசம்போர்டு கோரிக்கை விடுத்துள்ளது.