மலையாளம் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதோடு, அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்ற கோணத்தில் அவர் மீது தேடுதல் நோட்டீஸ் விநியோகித்துள்ளது. நடிகை ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் மீது ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை ஃபேஸ்புக் லைவ் மூலம் வெளிப்படுத்தியதற்காக அவர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


கொச்சி நகரத்தின் காவல்துறை ஆணையர் நாகராஜு சாகிலம் கடந்த ஏப்ரல் 22 அன்று விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையும், அதன் பிறகு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கும் பணி முடிவடைந்ததையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். `விஜய் பாபு மீது தேடுதல் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. முதன்மை விசாரணையில் இந்த வழக்கில் அவருக்குத் தொடர்புடையது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணைப் பயன்படுத்தியிருப்பது இந்த வழக்கு விசாரணையில் தெரிய வந்துள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார். 



விஜய் பாபு


விஜய் பாபுவை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, குற்றவாளியை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் சில நடைமுறைகள் உள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். `நாங்கள் நடவடிக்கைகளைப் படிப்படியாக எடுக்கவுள்ளோம்.. தற்போதைய சூழலில், இந்த விவகாரத்தில் சர்வதேச காவல்துறையான இண்டர்போல் உதவியை நாடுவது தேவையற்றது. தேவையெனில், அதனையும் நாங்கள் செய்வோம்’ எனவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 


காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கிய பிறகு, தலைமறைவாகியுள்ள விஜய் பாபு, கடந்த ஏப்ரல் 26 அன்று ஃபேஸ்புக் தளத்தில் லைவ் வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர் தன்னை அப்பாவி எனவும், உண்மையில் பாதிக்கப்பட்டவர் அவர் தான் என்றும் கூறியுள்ளார். ஃப்ரைடே ஃபில்ம் ஹவுஸ் என்ற மலையாள சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான அவர் அந்த வீடியோவில் அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண்ணின் பெயரையும் அடையாளத்தையும் குறிப்பிட்டுள்ளார். இது மற்றொரு குற்றம் என்பதால், அவர் மீது மீண்டும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



விஜய் பாபு


`முதலில் விஜய் பாபு மீது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்ததாக, அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைப் பகிர்ந்ததால், மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகத் தெரிகிறது’ என்று காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


விஜய் பாபுவின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 22 அன்று காவல்துறையில் புகார் அளித்ததோடு, கடந்த ஒன்றரை மாதமாக விஜய் பாபுவிடம் அவர் எதிர்கொண்ட வன்முறையையும், பாலியல் துன்புறுத்தலையும் விரிவாகத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.