சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பாரதிய ஜனதா கட்சியின் பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையின் ஒரு பகுதியாக,  ராஜஸ்தானின் பார்மரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சனாதனத்திற்கு  எதிராக பேசுபவர்  எவரும் நாட்டில் அரசியல் அதிகாரம், அந்தஸ்தை தக்கவைக்க முடியாது. சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதைஅ பொறுத்துக்கொள்ள முடியாது. முன்னோர்கள் தங்களது உயிரை பணைய வைத்து சனாதனத்தை காப்பாற்றினர். அதனை ஒழிக்க வேண்டும் என சிலர் பேசி வருகின்றனர். சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம்” என பேசியுள்ளார். சனாதனம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய பதிலடி கொடுக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சர் மிரட்டல் தொனியில் இவ்வாறு பேசியுள்ளார். 



கண்டனம்:


மத்திய அமைச்சரின் பேச்சு தொடர்பான இந்த வீடியோவை AIMIM கட்சியின் தலைவர் அசாதுதுன் ஓவைசி, ஜி20 மாநாடு முடிந்தத தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை வன்முறையை ஆதரிக்க தொடங்கியுள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார். 


சனாதன விவகாரம்:


அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, ”சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக உள்ள சனாதனத்தை ஒழிக்க வேண்டும். அது ஒரு கொசு, டெங்கி மலேரியா போன்றது” என பேசியிருந்தார். அதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் குவிய தொடங்கின. டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் உதயநிதிக்கு எதிராக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக பாஜக சார்பில் ஆளுநரிடம் மனுவும் வழங்கப்பட்டது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சாமியார், உதயநிதி தலையை கொண்டு வந்தால் 10 கோடி ரூபாய் வழங்குவேன் என்று அறிவித்தார். I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த சில தலைவர்களும் கூட, சனாதனம் தொடர்பான பேச்சை உதயநிதி தவிர்த்து இருக்கலாம் என பேசினர். இதனால், சனாதன விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளானது. இதனிடையே, உதயநிதியின் பேச்சுக்கு தக்க பதிலடி வழங்க வேண்டும் என, பிரதமர் மோடியே மத்திய அமைச்சர்களுக்கு வலியுறுத்தியதாக தகவல் வெளியாக, முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு கண்டனம் தெரிவித்தார்.