கேரளா மாநிலத்தின் இளம் வயது மேயராக பதவியேற்ற  திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது ஜாமினில் வெளியே வராத முடியாதபடி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மேயர் - பேருந்து ஓட்டுநர் மோதல்:


கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், அவரது கணவர் எம்.எல்.ஏ-வாக உள்ள சச்சின் தேவ் மற்றும் உறவினர்கள் 3 பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது, அவர்களின் பயணத்தின் போது முன் சென்று கொண்டிருந்த  கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஓட்டுநர் , அவர்களுக்கு வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேயர் குடும்பத்தினர் பேருந்தை மறித்து ஓட்டுநரிடையே இடையே வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.


மேயர் தரப்பு புகார்:


இதையடுத்து மேயர் மற்றும் குடும்பத்தினர் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஓட்டுநர் மீது புகாரளித்தனர். அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளதாவது, காரில் சென்று கொண்டிருந்த போது, பேருந்து ஓட்டுநர் தவறான செய்கை காட்டியதாக கூறி புகாரளித்தனர்.


இதையடுத்து, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், அவரது எம்.எல்.ஏ கணவர் சச்சின் தேவ் மற்றும் 3 பேர் மீதும் கே.எஸ்.ஆர்.டி.சி டிரைவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் அவரது புகார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.


ஓட்டுநர் புகார்:


இதையடுத்து, அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அவர் தெரிவித்ததாவது, மேயர தரப்பினர் தனக்கு எதிராக  பொய்யான புகாரை அளித்துள்ளனர். மேயர், அவரது கணவர் மற்றும் அவர்களது உறவினர்கள்தான் பேருந்தை மறித்து பேருந்தை இயக்க விடாமல் செய்தனர்.  பேருந்தில் உள்ள சிசிடிவி மெமரி கார்டை சேதப்படுத்தினர். மேலும் என்னை பணி செய்ய விடாமலும் பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையிலான தொந்தரவு செய்தனர் எனவும் தெரிவித்தார்.


 மேலும், காரில் பயணித்த மேயர் தரப்பினர் அனைவரிடம் விசாரணை நடத்துமாறும் மற்றும் பேருந்தில் பயணித்த சக பயணிகளிடமும் விசாரணை நடத்துமாறும், பேருந்து ஓட்டுநர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  


வழக்குப்பதிவு:


இதையடுத்து, வாகன ஓட்டுநரின் புகாரில் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பேருந்தை மறித்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக, ஐந்து உறுப்பினர்கள் மீதும் திங்கட்கிழமை ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


இந்நிலையில், உண்மையில் அங்கு என்ன நடந்தது? யார் மீது தவறு உள்ளது? என்பது நீதிமன்ற விசாரணைக்கு பின்தான் தெரியவரும்.