அதிகாலை சுமார் 2 மணி அளவில் கேரளம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால்,90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிக்கின்றன.
தீடீரென நிலச்சரிவு ஏன் ஏற்பட்டது? மீட்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது? மத்திய - மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது மற்றும் இதுபோன்ற நிகழ்வு கேரளாவில் அடிக்கடி நிகழ்வது ஏன் என்று குறித்து விரிவாக காண்போம்.
என்ன நடந்தது?
இந்தியாவில் சுற்றுலாத்தளங்களில் மிகவும் புகழ்பெற்ற மாநிலமாக கேரளா விளங்குகிறது. அந்த மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமாக வயநாடு திகழ்கிறது. அதற்கு காரணம் , அங்கு இருக்கும் மலைகள் , நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட இயற்கை அமைவாகும்.
இங்கு, நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து, இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாட்டின் முண்டகை, மேப்பாடி மற்றும் சூரல்மலை அருகே நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த எதிர்பாராத துயரச்சம்பவத்தால், தற்போதுவரை 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணி நிலை:
கனமழையுடன் கூடிய நிலச்சரிவால், முண்டக்கை மற்றும் சூரல்மலையை இணைக்கும் பாலமானது அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கடைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் சேறும் சகதியுமாக அப்பகுதி இருக்கிறது. அப்பகுதிகளில்,பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 700 பேரின் நிலை குறித்து தெரியவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், மீட்பு பணியில் இந்திய இராணுவமானது களமிறங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் , நிலச்சரிவில் கண்டறிய மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு காலையிலே தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பியது.
ரெட் அலர்ட்:
இந்த சூழ்நிலையில், மேலும் மழை நீடிக்கும் என்றும், கேரளாவின் வயநாடு மாவட்டங்களில் மிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சிக்கல் நீடிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது
.
நிவாரணம்:
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சமும் , காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது கேரள மாநிலத்திற்கு ரூபாய் 5 கோடி நிதி உதவியும் வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உதவி எண்கள் அறிவிப்பு:
எதனால் அடிக்கடி நிலச்சரிவு?
கேரளாவில் இதுபோன்ற நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவால், மக்கள் உயிரிழப்பு ஏற்படுவது இது முதல் முறையில்லை. சமீபத்தில், 2019 நிலச்சரிவில் சிக்கி 470 பேர் உயிரிழந்தனர். 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனமழை கொட்டியதில், பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவு குறித்து சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலையானது மிக பழமையான மலைத்தொடர், மிக கடின பாறைகளை கொண்டது. இமயமலையை விட மிக பழமையானது. மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை வளத்தை சுரண்டும் போது, அதாவது கற்களை வெட்டுதல், ரெசாட்ஸ் கட்டுதல் , பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் போது, பாறைகளின் இறுக்கத்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பாறைகள் மற்றும் மண்களின் இறுக்கத் தன்மை குறைகிறது.
மேலும் கேரளா மாநிலமானது, அதிகனமழை பெறும் மாநிலமாகவும் உள்ளது. கனமழையானது, அப்பகுதியில் இறுக்கத்தன்மை குறைவாக உள்ள பகுதிகளில் நிலச்சரிவை உண்டாக்குகிறது என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றன. கேரளாவில், கடந்த 4 நாட்களில் 100 செ.மீ-க்கும் அதிகமான மழை பெய்ததால், அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பசுமை தீர்ப்பாயம் அதிரடி:
இந்நிலையில் , இயற்கை வளங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் பசுமை தீர்ப்பாயம் களத்தில் இறங்கியுள்ளது. கேரள நிலச்சரிவு குறித்து, தாமாக முன்வந்து விசாரணை செய்ய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சுரங்கங்கள், குவாரிகள், சாலை கட்டுமான விவரங்களை தயார் செய்து வழங்குமாறு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது.
Also Read: Kerala Landslide: தோள் கொடுத்த தோழன்! ரூ.கோடி நிவாரண நிதியை கேரளாவுக்கு வழங்கிய தமிழ்நாடு அரசு!