கேரளாவில் அமைந்துள்ளது வயநாடு. அந்த மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமாக திகழும் வயநாட்டில் நேற்று நள்ளிரவில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த துயரச்சம்பவத்தால் ஒட்டுமொத்த கேரளமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த துயர சம்பவத்தால் மொத்தம் 54 பேர் பரிதாபமாக இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கேரளாவிற்கு ரூபாய் 5 கோடி நிதி வழங்கிய தமிழ்நாடு:
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு காலையிலே தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பியது. மேலும், தற்போது கேரள மாநிலத்திற்கு ரூபாய் 5 கோடி நிதி உதவியும் வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் இதுதொடர்பாக பேசினார்.
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா அடிக்கடி இதுபோன்று பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வயநாட்டில் நிகழ்ந்துள்ள இந்த பேரிடர் காரணமாக தமிழ்நாடு அரசு தங்களால் இயன்ற முழு உதவியை கேரளாவிற்கு அளித்து வருகிறது.
கேரள முதல்வருக்கு தொலைபேசியில் ஆறுதல்:
5 கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து மீட்புக்குழு:
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன், மற்றும் ஜானி டாம் வர்கீஸ், ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளாவிற்குப் புறப்பட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 101 நபர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காலையில் இருந்து தற்போது வரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அந்த மாநில அதிகாரிகள் மீட்பு படையினருடன் இணைந்து ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.