கேரளாவில் அண்மையில் ஒரு தந்தையும் பெண்ணும் அவதூறு செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த மாநில உயர்நீதிமன்றம்,’அப்பாவும் பெண்ணும் சாலையில் நிம்மதியாகக் கூட நடந்து செல்ல முடியவில்லை’ எனக் கருத்து கூறியுள்ளது. காவல்துறை அதிகாரி ஒருவரும் அவரது மகளும் அவதூறு செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.ஒரு தந்தையும் அவரது டீனேஜ் மகளும் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களைக் கேட்காமல் சாலையில் நடக்க முடியாது என்பது "துரதிர்ஷ்டவசமானது" என்று கேரள உயர் நீதிமன்றம் அண்மையில் கூறியுள்ளது.இது போன்ற தகாத கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படும் நபருக்கு நீதிமன்றம் அண்மையில் முன்ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
கேரளாவில் தந்தை ஒருவர் தனது 14 வயது மகளுடன் சாலையில் செல்லும்போது குற்றம்சாட்டப்பவர் அவர்களுக்கு எதிரான மோசமான கருத்துக்களைக் கூறியுள்ளார்.அதற்கு ஆட்சேபம் தெரிவித்த நிலையில் ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளரான அந்தத் தந்தையை ஹெல்மெட்டால் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
"யாரோ ஒருவர் அநாகரீகமான கருத்துக்களை வெளியிடாமல் ஒரு தந்தையும் அவரது மகளும் ஒன்றாக சாலையில் நடக்க முடியாது என்றால் அது துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் புதன்கிழமை அன்று குறிப்பிட்டுள்ளது.
மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர், சிறுமியின் தந்தை தன்னையும் அந்த நேரத்தில் அவருடன் இருந்த மற்ற நபரையும் தாக்கியதாகக் கூறினார்.
இதற்கு, எந்தவொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு எதிராக மோசமான கருத்துக்களைக் கேட்டால் அது இயல்பான எதிர்வினையாக இருக்கும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றப் பிரிவு 308 (குற்றமிழக்க முயற்சி)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.
முன்ஜாமீனை எதிர்த்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ’மனுதாரரும் சாலையில் தாங்கள் நடந்து சென்றபோது குற்றம்சாட்டப்பட்டவர் அவதூறாகப் பேசியதாகவும் இதற்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், குற்றவாளி அவரை மார்பில் ஹெல்மெட்டை வைத்து தாக்கியுள்ளார்’ எனக் கூறியுள்ளார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், “வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டும், மனுதாரருக்கு முன்ஜாமீன் பெற உரிமை இல்லை என்று நீதிமன்றம் கருதுகிறது” என்று கூறியது. வழக்கின் விசாரணை அதிகாரியிடம் மனுதாரர் குற்றம் சாட்டப்பட்டவர் சரணடைந்தால், அன்றைய தினம் அவரை அதிகார எல்லைக்குட்பட்ட மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.