கேரள உயர்நீதிமன்றம் அண்மைக்காலமாக தனது அதிரடித் தீர்ப்புகளுக்காக கவனிக்கப்பட்டு வருகிறது.


பெற்றோரால் பிரிக்கப்பட்ட தன்பால் ஈர்ப்புப் பெண்கள் இருவரை சேர்த்துவைத்ததை உலகமே பாராட்டியது. அந்த வரிசையில் பிறப்பு சான்றிதழில் தாயின் பெயர் மட்டுமே இருக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பாராட்டப்பட்டு வருகிறது.


திருமணமாகாத தாய்மார்கள் மற்றும் பாலியல் வன்புணர்வால்  பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளும் தனியுரிமை, சுதந்திரம், கண்ணியம் ஆகிய அடிப்படை உரிமைகளுடன் இந்த நாட்டில் வாழலாம் என்றும், பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டையில் ஆகியவற்றில் தாயின் பெயரை மட்டுமே சேர்க்கலாம் என்றும் கேரள உயர்நீதிமன்றம் தனது அதிரடி உத்தரவில் கூறியுள்ளது. சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களுக்கும் இது பொருந்தும். திருமணமாகாத தாயின் குழந்தையும் இந்தியாவின் குடிமக்கள் என்றும், அத்தகைய நபரின் உரிமைகளை யாரும் மீற முடியாது என்றும் நீதிபதி பி வி குன்ஹிகிருஷ்ணன் கூறியுள்ளார்.


அத்தகைய நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் ஊடுருவ முடியாது என்றும், அப்படி நடந்தால், அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நீதிமன்றம் உறுதி செய்யும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மூன்று ஆவணங்களில் தந்தையின் பெயர் வித்தியாசமாக இருந்த திருமணமாகாத தாயின் மகன் ஒருவரின் மனுவை விசாரணை செய்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது. இது தொடர்பாக நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதாப்பாத்திரத்தை தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.


“பெற்றோரின் இருப்பிடம் தெரியாமல் அவமானப்படுத்தியதால் தன் வாழ்க்கையை சபிக்கும் ‘கர்ணன்’ போன்ற கதாபாத்திரங்கள் இல்லாத சமுதாயம் நமக்கு வேண்டும். ‘மகாபாரதத்தில்’ உண்மையான வீரனாகவும் போராளியாகவும் இருந்த உண்மையான துணிச்சலான ‘கர்ணன்’ நம் சமுதாயத்துக்கு வேண்டும். நமது அரசியலமைப்பு மற்றும் நீதிமன்றங்கள் அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும், மேலும் ”புதிய யுக ‘கர்ணன்கள்’ மற்ற குடிமக்களைப் போல கண்ணியத்துடனும் பெருமையுடனும் வாழ இது வழிவகை செய்யும்” என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


சமூக ஊடகங்கள் நீதிமன்றத்தின் இந்த முற்போக்கான நடவடிக்கையை பாராட்டியுள்ளது.