குருவாயூர் கோயிலில் இருக்கு கிருஷ்ணா மற்றும் சிவன் யானையை பாகன்கள் துன்புறுத்திய சம்பவத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னுமிடத்தில் கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்திய அளவில் முக்கிய வழிபாட்டுத் தலமாக திகழும் குருவாயூர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். குருவாயூர் கோயில் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த கோயிலுக்கு சொந்தமான யானைகள் பராமரிப்பு மையம் மம்மியூர் பகுதியில் அமைந்துள்ளது. இது அப்பகுதி மக்களால் யானை கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 30க்கும் மேற்பட்ட யானைகள் பாகன்கள் நியமிக்கப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே சமீபத்தில் யானைகளை பராமரித்து வரும் 2 பாகன்கள் யானைகளை அடித்து துன்புறுத்தும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. இதற்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக குருவாயூர் தேவசம் போர்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பாகன்களால் துன்புறுத்தல் செய்யப்பட்ட 2 யானைகளும் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குருவாயூர் கோயிலுக்கு வழங்கிய கிருஷ்ணா மற்றும் சிவன் யானை என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உடனடியாக சம்பந்தப்பட்ட 2 பாகன்களையும் யானைகள் அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக தேவசம் போர்டு பணியிடை நீக்கம் செய்தது. இப்படியான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கானது நீதிபதி அனில் கே.நரேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய அவர், ‘யானைகளை பாகன்கள் தாக்கிய சம்பவம் குறித்து தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் இந்த சம்பவம் பற்றி குருவாயூர் தேவசம் போர்டு அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கேரள வனத்துறை தலைமை அதிகாரி அறிக்கை சமர்பிக்க வேண்டும்’எனவும் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: Bus Accident: காலையிலேயே அதிர்ச்சி சம்பவம்.. சென்னையில் இருந்து சென்ற பேருந்து மீது லாரி மோதி 7 பேர் உயிரிழப்பு