ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பாரம்பரிய இந்து கோவிலை வரும் -14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.


அமீரகத்தில் இந்து கோயில்:


ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் மந்திர்(BPAS), அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நட்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கோவில் கட்டுவதற்கான சுமார் 900 கோடி ரூபாய் செலவையும், 27 ஏக்கர் நிலத்தையும் அமீரக அரசே வழங்கியுள்ளது என்பது அங்குள்ள இந்துக்களை நெகிழ வைத்துள்ளது.  


கோயில் கட்டுமான பணிகள்:


1997ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலை கட்டுவதற்கான நிலத்தை வழங்குவதாக கடந்த 2015ம் ஆண்டு அந்நாட்டு அரசு அறிவித்தது தொடர்ந்து, 2019ம் ஆண்டு கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.



இக்கோயிலில் சுவாமி ‌நாராயணன் ,ராதா கிருஷ்ணர், சீதா ராமர், சிவான் பார்வதி, ஜெகநாதர், வெங்கடாஜலபதி, அய்யப்பன் உள்ளிட்ட கடவுள் சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த 7 சன்னதிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 ராஜ்ஜியங்களை குறிக்கும் படி கட்டப்பட்டுள்ளன.  கோவிலின் ஒவ்வொரு தூணிலும் ராமாயணம், சிவபுராணம், பகவத்கீதை மற்றும் மகாபாரத வரலாற்று புராணங்களை வடித்து உள்ளனர். இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் வெள்ளை பளிங்கு ஆகியவை முறையே ராஜஸ்தான் மற்றும் இத்தாலியில் இருந்து பெறப்பட்டு, கோயில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.


4 லட்ச மணி நேர உழைப்பு:


இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களை சித்தரிக்கும் கலைநயமிக்க வடிவங்கள், உருவங்கள் மற்றும் சிற்பங்களை இந்தியாவைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட திறமையான கலைஞர்கள் செதுக்கி தந்துள்ளனர். இந்த கோயிலை கட்டி முடிக்க 4 லட்சம் மணி நேர உழைப்பு தேவைப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி கோவில் திறக்கப்பட்டாலும் 18-ம் தேதி முதலே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் திறப்பு விழாவுக்கான கடைசி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.