கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆட்சியை தக்கவைத்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் மற்றும் டவ்தே புயல் ஆகியவை காரணமாக புதிய அரசு பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்தச் சூழலில் புதிய அரசு திருவனந்தபுரத்தில் நாளை மாலை பதவியேற்க உள்ளது. இதன் காரணமாக புதிய அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியானது. அதன்படி வரலாற்றில் முதல்முறையாக கேரளா தேவஸ்வம் போர்டு துறைக்கு அமைச்சராக ஒரு பட்டியலின தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தேவஸ்வம் போர்டு அமைச்சராக பதவியேற்க உள்ளார். இவர் திருச்சூர் மாவட்டத்தின் செலக்கரா தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு கேரள சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்துள்ளார். அத்துடன் இ.கே.நாயர் அமைச்சரவையில் பட்டியலின மற்றும் ஆதிதிராவிடர் நலன் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 




கடந்த முறை பினராயி விஜயன் ஆட்சியில் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. இதனைத்தொடர்ந்து இம்முறை இந்த தேவஸ்தான போர்டுக்கு யார் அமைச்சராக வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. இந்தச் சூழலில் பட்டியலின தலைவர் ஒருவரை மார்க்சிஸ்ட் கட்சி அமைச்சராக்கி உள்ளது. முன்னதாக புதிய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு இடமளிக்கவில்லை என்ற சர்ச்சை பெரிதாக கிளம்பியது. இம்முறை அவருக்கு சட்டப்பேரவையின் அரசு கொரடா பதவி வழங்குப்பட்டுள்ளது. இவருக்கு மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்காதது கேரள மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.