சமூக வலைத்தளங்கில் நேற்று முதல் காங்கிரஸ் டூல்கிட் என்ற சர்ச்சை தீவிரமாக பரவி வருகிறது. அதாவது இந்த ஆவணத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சி அவதூறு பரப்ப திட்டமிட்டுள்ளது என்று பாஜக தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துவந்தனர். மேலும் அந்த டூல்கிட் ஆவணத்தில் கும்பமேளா ஒரு பெரிய கொரோனா பரப்பும் நிகழ்ச்சியாக அமைந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக யோகா குரு பாபா ராம்தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், "இந்து மதம் மற்றும் கும்பமேளா ஆகியவை தொடர்பாக அவதூறு பரப்புபவர்கள் சமூதாயம்,கலாச்சாரம் மற்றும் அரசியல் ரீதியாக பெரிய குற்றம் செய்பவர்கள். இதை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். அதாவது அவர்கள் அரசியல் செய்யலாம், ஆனால் இந்துக்களை காயப்படுத்த கூடாது. அப்படி செய்தால் இந்த நாடு அவர்களை மன்னிக்காது. இப்படி அவதூறு பரப்புபவர்களை மக்கள் மதித்து ஏற்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் " எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த டூல்கிட் விவகாரம் பாஜக நடத்தும் அரசியல் நாடகம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி டெல்லியில் நடைபெற்று வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டடம் தொடர்பாக தான் ஆய்வை நடத்திவருகிறது. மற்ற எந்த விஷயம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆய்வு நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சி பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி இது போலியான ஆவணம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.