சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை மிரள வைத்து வந்த கொரோனா பெருந்தொற்று விஞ்ஞான உலகின் முயற்சியின் காரணமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது, தடுப்பூசி போட்டு கொள்வது என பல்வேறு நடவடிக்கையின் விளைவாக கொரோனா தாக்கம் குறைந்தது.
இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் உருமாறி தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. ஆனால், அதன் தாக்கம் குறைந்திருந்தது. இதற்கிடையே, சீனாவில் கொரோனா தாக்கம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தியாவில் மத்திய, மாநில அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில், புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளியிட்ட உத்தரவில், கோவிட் தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதை தவிர, மக்களுக்கு சானிடைசர்களை ஏற்பாடு செய்து தருமாறு கடைகள், திரையரங்குகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளின் அமைப்பாளர்களுக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த 30 நாள்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2,119 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கும் XBB.1.5 வகையால் இந்தியாவில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு XBB.1.5 என்ற உருமாறிய கொரோனா பரவியுள்ளது.