கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஆயுதப்படை வளாகத்தில் தற்காலிக காவலர் பயிற்சி உணவகம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொன்.முத்துக்குமார் என்பவர் நடத்தி வருகிறார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த புகார் மனுவில், கரூர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி துணை முதல்வராக தேவராஜ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கரூர் ஆயுதப்படை காவலர் பயிற்சி பள்ளியில் சமையல் ஒப்பந்ததாரராக எனது பணியை செய்து வருகிறேன். நான் நடத்தி வரும் உணவக வருமானத்தில் அவரது குடும்ப செலவிற்கும், என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு என்னை வற்புறுத்தி வருகிறார்.
இதற்கு ஆதாரமாக, தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜின் மகளுக்கு நீட் பயிற்சி கட்டணம் ரூ.10,000/- செலுத்தியதன் ரசீது என்னிடம் உள்ளது. அதன் பிறகு, நான் நடத்தி வரும் உணவகத்திற்கு வந்து ரூ.50,000/-ஐ என்னிடமிருந்து பெற்று சென்றார்.
மேலும், தொடர்ந்து தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜ் உணவகத்திலிருந்து எனக்கு வரும் வருமானத்தில் என்னிடம் கமிஷன் தொகை கேட்டும், லேப்டாப் கேட்டும் என்னை மிரட்டி தொந்தரவு செய்தும் மற்றும் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மது வாங்கி கொடுத்து ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தேவையற்ற பிரச்னைகளைத் தூண்டி விடுகிறார்.
தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜ் கேட்கும் பணத்தையும், லேப்டாப்பையும் வாங்கிக் கொடுக்க இயலாததால், நான் நடத்தி வரும் உணவகத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எனக்கு மிரட்டல் விடுத்துவருகிறார். எனவே, தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து தொடர்ந்து உணவகம் நடத்த எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு வேண்டுகிறேன். என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகார் குறித்து கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் தற்காலிக பயிற்சி பள்ளி துணை முதல்வர் தேவராஜ் இடம் விளக்கம் கேட்க அலைபேசி மூலம் இரண்டு முறை தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. கரூரில் ஆயுதப்படை காவலர் தற்காலிக பயிற்சி பள்ளி துணை முதல்வர் பற்றிய லஞ்சப் புகாரால், கரூர் மாவட்ட காவல்துறை இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்