கேரளாவில் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரம் இருந்த வீடு ஆற்றில் மூழ்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
கேரளாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் முண்டகாயத்தில் சமீபத்தில் பெய்த மழையின் போது மணிமாலா ஆற்றின் கரையின் ஓரத்தில் இருந்த இரண்டு மாடி வீடு திடீரென சில வினாடிகளில் ஆற்றில் இடிந்து விழும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் இந்த சம்பவத்தின் வீடியோவில், அந்த சாலையில் இருந்து விரிசல் ஏற்படுவதையும், அடுத்த சில நொடிகளில் ஆற்றில் இடிந்து விழுவதையும் தெளிவாகக் காண முடிந்தது. இந்த சம்பவம் அக்டோபர் 17ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், வீட்டின் குடியிருப்பாளர் ரெஜி மற்றும் அவரது குடும்பத்தினர், இடிந்து விழுமுன் வெளியேற்றப்பட்டனர்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரளாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதன்கிழமை வலுவிழந்துவிட்டது என்று வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், அடுத்த 3-4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், திருவனந்தபுரம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் பத்தனம்திட்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுவரை, திங்களன்று மாநிலத்தில் 22க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
கேரளாவில் சனிக்கிழமையிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 20க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களின் கூட்டிக்கல் மற்றும் கோக்காயரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
இடுக்கி மாவட்டத்தின் கொக்காயர் கிராமத்தில், நிலச்சரிவில் சிக்கிய அம்னா (7), அஃப்சன் (8) மற்றும் அகியான் (4) என அடையாளம் காணப்பட்ட மூன்று குழந்தைகளின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர். மேலும், தாங்கமுடியாத துயரமாக மூன்று குழந்தைகளின் அருகில், ஒரு தாயும் அவரது மகனும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து இறந்து கிடந்தனர். மேலும் ஒரு குழந்தையின் சடலம் தொட்டிலில் இருந்து மீட்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்