கேரள மாநிலத்தில், பத்ம லக்ஷமி என்ற திருநங்கை அம்மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார். பத்ம லஷ்மிக்கு, அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல் திருநங்கை வழக்கறிஞர்:
கேரளாவில் உள்ள எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர், பத்ம லஷ்மி. கேரளாவின் பார் கவுன்சில், பத்ம லஷ்மியை சமீபத்தில்தான் வழக்கறிஞராக தேர்வு செய்தது. இதனால், பத்ம லக்ஷ்மி கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் பத்ம லக்ஷமிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also Read|ஆகாயத்தில் வலம் வந்த இந்தியாவின் முதல் பெண் விமானி இவர்தானா?
அமைச்சர் வாழ்த்து:
கேரள மாநில அமைச்சர் பி.ராஜீவ், பத்ம லக்ஷ்மியின் வெற்றிக்காக அவருக்கு புகழாரம் சூட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், பின்வருமாறு அவரது பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“வாழ்க்கையில் பல இன்னல்களை கடந்து இன்று கேரளாவின் முதல் வழக்கறிஞராக உருவெடுத்துள்ள பத்ம லக்ஷமிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில், ஏதாவதொறு விஷயத்தில் முதல் ஆளாக வந்து சாதிப்பது மிகவும் கஷ்டமான விஷயம்தான். இவரது விஷயத்தில், முன்னோடி என கூற யாரும் இல்லாத சமயத்தில் இவருக்கு வந்திருக்கும் தடைகள் முடியாததாக இருந்திருக்கும். இவரை அமைதியாக்கவும், ஊக்கமளிக்காமல் இருப்பதற்கும் இவருடன் ஆட்கள் இருந்திருப்பார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி இன்று பத்ம லஷ்மி முதல் திருநங்கை வழக்கறிஞராக உருவாகி, சட்டத்தின் வழியே வரலாறு படைத்துள்ளார்” என்று கேரள மாநிலத்தின் அமைச்சர் பத்ம லஷ்மிக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.
மேலும், “உண்மையான நீதிக்கான பாதையில் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பதை பத்மலஷ்மி கடந்து வந்த பாதையே அவருக்கு உணர்த்தியுள்ளன. அதனால்தான், அவர் இன்று மறுக்கப்பட்ட குரல்களின் முன்னோடியாக நிற்கிறார். பத்ம லக்ஷமியின் வாழ்க்கை, அவரைப்போல பல கனவுகளுடன் வாழும் திருநங்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்” என்றும் அமைச்சர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த பதிவிற்கு பலரும் பலதரப்பட்ட கமெண்டுகளின் மூலம் தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
மக்கள் கருத்து:
கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லஷ்மிக்கு, மக்கள் பலர் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் இதர வழிகளில் அவர்களின் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர். மேற்கூறிய அமைச்சரின் பதிவிலும், பலர் பத்ம லஷ்மிக்கு வாழ்த்து செய்தி கூறி கமெண்ட் செய்துள்ளனர்.
இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியாக ஜோதியா மோன்டால் ஆனதைத் தொடர்ந்து, பத்ம லஷ்மியின் சாதனையும் சமூக வலைதளங்களில் பலரால் புகழப்பட்டு வருகிறது. இதே போல, 2018ஆம் ஆண்டு, மகராஷ்டிராவின் நாக்பூர் நகரின் மக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை ஆர்வலர் வித்யா காம்ப்ளே என்பவரும் முதல் முறையாக உறுப்பினராக சேர்க்கப்பட்டார். அப்போதும், மக்கள் பலர் திருநங்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.