கேரளாவில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் மாணவ, மாணவிகள் ஒன்றாக சேர்ந்திருப்பதை தடுக்க சிலர் செய்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


பொதுவாக இருபாலர் பயிலும் பள்ளி, கல்லூரிகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுவது வழக்கம். வகுப்பறையில் பேசக் கூடாது, பள்ளி வளாகங்களில் ஒன்றாக சுற்றக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இன்றளவும் அமலில் உள்ளது. மாணவ, மாணவிகளின் ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கல்வி நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி பொதுவாகவே இளைய சமுதாயம் மத்தியில் எதிர்ப்பு தான் உள்ளது. 


அந்த வகையில் கேரளாவில் மாணவ, மாணவிகள் ஒன்றாக வெளியில் சேர்ந்திருப்பதை தடுக்க சிலர் செய்த சம்பவம் ஒன்று பேசுபொருளாக மாறியுள்ளது. திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியின் வாசலில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இங்கு மாணவ, மாணவிகள் கூடி இருப்பதை தடுக்க சிலர் அங்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கையை சம இடைவெளியுடன் ஒருவர் அமரக்கூடிய வகையில் வெட்டி எடுத்துள்ளனர். 






இதனைக் கண்ட கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புதுமையான வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதுதொடர்பான அற்பத்தனமான நிகழ்ச்சிகளால் தோழமையைப் பகிர்ந்து கொள்வதைத் தடுக்க முடியாது என நினைத்த அவர்கள் லேப்டாப் வடிவில், அதாவது பாலின பேதமின்றி மடியில் அமர்ந்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலானது. பலரும் மாணவர்களின்  எதிர்ப்பை பாராட்டினர். 


இதுகுறித்து பேசிய அக்கல்லூரி மாணவிகள் சங்கத்தின் பிரதிநிதி அங்கிதா ஜெசி, கல்லூரி வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்பு சங்கங்களால் தான் இத்தகைய சம்பவம் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என கூறியுள்ளார். மேலும் போக்குவரத்து போன்ற பல காரணங்களுக்காக மாணவர்கள் அங்கு காத்திருப்பதைக் கண்டு பல நேரம் குடியிருப்பு வாசிகள் காவல்துறையை அழைத்துள்ளனர்  எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


உடனடியாக திருவனந்தபுரம் நகர மேயர் ஆர்யா எஸ் ராஜேந்திரன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்து இருக்கைகளை வெட்டியது பொருத்தமற்ற செயல் என்றும், நம் மாநிலத்தில் பாலின பேதமில்லாமல் ஒன்றாக அமைவதற்கு எவ்வித தடையும் இல்லை என கூறியுள்ளார். அதேசமயம் காலம் மாறிவிட்டது என்பதை புரிந்து கொள்ளாதவர்களிடம் மட்டுமே அனுதாபம் காட்ட முடியும் என தெரிவித்த மேயர் ஆர்யா எஸ் ராஜேந்திரன் விரைவில் பேரூராட்சி மூலம் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிறுத்தம் கட்டித் தரப்படும் என தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண