திருமணமாகாத 24 வார கர்ப்பிணிப் பெண் ஒருவரின் கருவை அவரது உயிருக்கு ஆபத்து இல்லாமல் கலைப்பது குறித்து தீர்மானிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.


எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் இப்பெண்ணை பரிசோதித்த நிலையில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, திருமணமாகாத பெண்ணை அவர் கோரியும் கருக்கலைப்புக்கு அனுமதிக்காமல் இருப்பது, மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் (Medical Termination of Pregnancy) நோக்கத்துக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது.


திருமணமாகாத 24 வார கர்ப்பிணிப் பெண்..


மணிப்பூரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் மனம் ஒருமித்த உறவால் கருவுற்ற நிலையில், கடந்த ஜூலை 16ஆம் தேதி, தான் கருவுற்றிருப்பது தனக்கு மன வேதனையை ஏற்படுத்துவதாகவும், பி.ஏ., பட்டதாரியான தான் தாயாவதற்கு மனதளவில் தயாராக இல்லை என்றும், கர்ப்பத்தைத் தொடர்ந்தால் தன்னை அச்செயல் மனதளவில் இறுதிவரை வருத்தப்பட வைக்கும் என்றும் தெரிவித்து கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி மனு தொடர்ந்திருந்தார்.


மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் ..


இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர், நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒருமித்த உறவின் காரணமாக அப்பெண் கருவுற்றதையும், திருமணம் ஆகாத பெண்ணுக்கு சட்டவிதிகளின் படி கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் சுட்டிக்காட்டி கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க மறுத்தது.


மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின்படி 20 முதல் 24 வாரங்களுக்குள் விருப்பப்படும் பெண்கள் கருக்கலைப்பு செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாம் எனும் நிலையில், முன்னதாக தன் 23 வார கருவை கலைக்க திருமணமாகாத இப்பெண்ணுக்கு அனுமதி வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்தது. 


இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பெண் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மேல்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கு இன்று (ஜூலை.21) விசாரணைக்கு வந்தது.


’திருமணமாகாத பெண்ணுக்கும் சலுகை தர வேண்டும்’


இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, திருமணமான பெண்களுக்கு மட்டும் 20 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில்,  மனுதாரரான திருமணமாகாத பெண்ணுக்கு இந்தச் சலுகை மறுக்கப்படக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.


மேலும், மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் விதிகளின்படி இதுகுறித்து மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் இயக்குநரை கேட்டுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், பெண்ணின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் கருவை கலைக்க முடியுமானால் எய்ம்ஸ் அதனை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. 


சட்டத்தின் நோக்கத்தை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்!


தவிர 2003 ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் பிரிவு 3இன் கீழான விளக்கத்தில் ’கணவன்’ எனும் சொல்லுக்கு பதிலாக ’பார்ட்னர்’ எனும் வார்த்தை பயன்படுத்தப்படுவதையும், இச்சட்டத்தின் கீழ் திருமணமாகாத பெண்களையும் உள் கொண்டுவருவதற்கான இச்சட்டத்தின் நோக்கத்தையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.