கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்கள், இதர பகுதிகளில் உள்ள ரஷியாவை ஆண்ட ஜோசப் ஸ்டாலினின் படத்தை அக்கட்சித் தலைவர்கள் அகற்ற வேண்டும் என காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ. வி.டி.சதீசன் வலியுறுத்தி உள்ளார்.


உக்ரைனில் உள்ள தெற்கு மாகாணமான ஒடிசாவில் உள்ள விமான நிலையம் அருகே 24 கல்லரைகளில் 5000 முதல் 8000 பேர்களுடைய எலும்புக்கூடுகள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1930-ஆம் ஆண்டு சோவியத் யூனியை ஆண்ட ஜோசப் ஸ்டாலினின் ரகசிய போலீஸ் பிரிவான NKVDயால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் தேசிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்துக்கு காரணமான ஜோசப் ஸ்டாலின் படத்தை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ”சர்வாதிகாரத்துக்கும், இனப்படுகொலைக்கும் பெயர்போனது கம்யூனிஸ்டு கட்சி. புதிதாக தோண்டி எடுக்கப்பட்டு உள்ள எலும்புக்கூடுகள், மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் அறிந்த இந்த நாகரீக சமுதாயத்தில் வாழும் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.


ஜனநாயக மாண்புகளை கேரளத்தில் உள்ள கம்யூனிச இயக்கங்கள் உண்மையில் மதிப்பதாக இருந்தால் ஜோசப் ஸ்டாலினின் படங்களை அகற்றி அவருக்கு மரியாதை செலுத்துவதை நிறுத்த வேண்டும் என சதீசன் குறிப்பிட்டு உள்ளார்.



ஜெர்மனியை ஆட்சி செய்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், சோவியத் யூனியை ஆட்சி செய்த ஜோசப் ஸ்டாலினுக்கு பிறகு உலகிலேயே அதிக மக்களை கொலை செய்தவர் கம்போடியாவின் முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் போல் பாட் என தெரிவித்து உள்ள சதீசன், உக்ரைனில் கண்டெடுக்கப்பட்டு உள்ள மனித எலும்புக்கூடுகள் கம்யூனிச சித்தாந்தத்தின் கோரமுகத்தையும், சர்வாதிகாரத்தையும் எடுத்துரைக்கும் எச்சங்கள் என தனது அறிக்கையில் விவரித்து உள்ளார்.


இதுகுறித்து சதீசன் மேலும் தெரிவிக்கையில், 15 லட்சம் மக்களை படுகொலை செய்த ஜோசப் ஸ்டாலினை படத்தை தங்கள் அலுவலகங்களில் மாட்டி இன்னும் அவரை கேரள மாநில கம்யூனிஸ்டு தலைவர்கள் வழிபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.


”கேரள மாநிலத்தில் உள்ள கம்யூனிஸ்டு தலைமை ஜனநாயகத்தின் மாண்புகளை உணர்ந்து இருந்தால், சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் படத்தை அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை வேடம் போடாமல் அடுத்த தலைமுறை கட்சி அனுதாபிகளை ஈர்க்க ஜனநாயக வழியில் நடக்க வேண்டும்.” என அவர் அறிவுறுத்தி உள்ளார்.


1930-களில் சோவியத் யூனியனை ஜோசப் ஸ்டாலின் ஆட்சி செய்தபோது உக்ரைனை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குலாக் சிறைகளில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், 1932, 1933-ம் ஆண்டுகளில் ஹோலோடொமோரில் 10 லட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்களை ஜோசப் ஸ்டாலினின் படைகள் கொலை செய்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.