Headlines Today in Tamil, 29 Aug: 


டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பவினா பென் படேல். 2020 பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றுள்ளார் குஜராத் மாநிலத்தின் பவினா. 


காபூல் விமான நிலையத் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. காபூல் விமான நிலையத் தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இறந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மீது அமெரிக்கப்படை ட்ரோன் தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 




காபூல் விமான நிலையத்தின் 3 வாயில்களை விட்டு விலகியது அமெரிக்கப் படை. காபூல் விமானநிலையத்தை விட்டு வெளியேற வேண்டிய காலக்கெடு நெருங்குவதை அடுத்து அமெரிக்கப் படைகள் காபூல் விமான நிலையத்தின் மூன்று வாயில்களில் இருந்து விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மீண்டும் ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 


மத்திய அரசின் ‘விக்ரஹா’ ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு. ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடலோரக் காவல் படை இயக்குநர் ஜெனரல் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் `விக்ரஹா' கப்பலை நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரோந்துக் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.


கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து  நாளை முதல் அந்த மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.  நாட்டின் தினசரி கொரொனா பாதிப்பு எண்ணிக்கையில் சரிபாதி கேரளாவிலிருந்து பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.




மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து தீர்மானத்தை எதிர்த்து பாரதிய ஜனதா சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அதிமுகவும் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. 


 இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் இனி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் அறிவித்துள்ளார். மீன்வளத்துறை, பால்வளத்துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில் முதலமைச்சர் பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்தது. சென்னையில் மட்டும் 3 செ.மீ மேல் மழை பதிவாகியிருப்பதாகத் தகவல்.




லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இரண்டாவது இன்னிங்கிஸில்  இந்தியா 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில் இங்கிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றிபெற்றது.