கேரளாவில் பேருந்தில் இருந்து விழப்போன பயணி ஒருவரை நடத்துநர் கண நேரத்தில் காப்பாற்றிய சம்பவம் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. நடத்துநர் பேருந்தின் பின்பக்க வாசலுக்கு அருகே நின்றுக் கொண்டு டிக்கெட் வழங்கி கொண்டிருந்தார். அப்போது வாசலுக்கு நேராக இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென பிரேக் போட்டதால் சட்டென நிலைகுலைந்த அந்த இளைஞர், கீழே விழப்போனார். ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த நடந்துநர் கண நேரத்தில் அந்த இளைஞரின் கையைப் பிடித்து உயிரைக் காப்பாற்றினார்.
நடத்துநர் மட்டும் இல்லையென்றால் அந்த இளைஞர் நிச்சயம் உயிரிழந்திருப்பார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் அவரை ஸ்பைடர்மேன், கடவுள் என அழைத்து தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் நடத்துநர் தனது 25வது அறிவை வைத்து பயணியின் உயிரை காப்பாற்றியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். கேரளா பேருந்துகளின் படிக்கட்டுகளில் கதவுகள் பயணிகளின் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்ததும் அந்த இளைஞர் உயிர் பிழைக்க காரணமாக அமைந்துள்ளது.
கேரள போக்குவரத்து கழகத்துக்கு குவியும் பாராட்டு
முன்னதாக கடந்த வாரம் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளார். அவர் திரிச்சூரில் இருந்து கோழிக்கோடு தொட்டில் பாலம் நோக்கி கேரள அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்து பெரமங்கலம் என்ற இடத்தில் சென்ற போது அப்பெண்ணுக்கு பிரசவ வலி உண்டாகியுள்ளது. இதனால் பேருந்தில் இருந்த சக பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளனர். வலியால் அப்பெண் துடிக்க, சில பெண்கள் பிரசவத்துக்கான முதலுதவி செய்ய முன்வந்தனர். வழக்கமான வழியை மாற்றியை பேருந்து அருகில் இருந்த அமலா மருத்துவமனைக்கு விரைந்து சென்று அப்பெண்ணை சிகிச்சைக்காக முடிவு செய்தனர். ஆனால் வலி அதிகமாகவே அப்பெண்ணுக்கு பேருந்தில் குழந்தை பிறந்தது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. தொடர்ச்சியான செயல்களால் கேரள போக்குவரத்துக்கழகம் பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.